மட்டக்களப்பில் புத்தர் சிலைகள் முளைப்பதால் தமிழ் மக்களுக்கு பல்வேறு சந்தேகம்- இரா.துரைரெட்ணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே திடீர் திடீரென முளைத்துவரும் புத்தர் சிலைகள் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழத் தொடங்கியுள்ளன.  இவை நிறுத்தப்பட வேண்டியவையாகும் என கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் முகாமிட்டிருந்த இடங்களில் அவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்ட சிறு சிறு அமைப்புக்களை பெரிதாக்கி நிரந்தரமாக்கிக் கொள்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. உதாரணமாக, பிள்ளையாரடியில் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டதனை குறிப்பிடலாம்.

அதனைவிடவும், ஏற்கனவே யுத்தத்திற்கு முன்னர் பௌத்த விகாரைகள் அமைந்திருந்த இடங்களில் தற்போது, விகாரைகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிதாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் புத்தர் சிலைகளை வைத்து அவ்விடத்தில் விகாரைகளை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் என்னிடம் முறையிடுகின்றனர்.

இதற்கு இப்போதுள்ள முகாம்களைச் சேர்ந்த ஒருசில பாதுகாப்புப் படையினரும் மாறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் நல்லிணக்க மேம்பாட்டைச் சீர்குலைப்பதாக அமையும்.

மதங்கள் என்பவை மக்கள் மத்தியில் மனிதத்துவத்தினை மேம்படுத்தி நல்வழிப்படுத்துவதற்கும், சமாதானத்தினையும், அமைதியினையும் ஏற்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். இல்லாது போனால் மதங்கள் இனங்களுக்கிடையில் குழப்பங்களையும் சந்தேகங்களையும் வளர்ப்பவையாக மாறிவிடும். தமிழ் மக்களைக் பொறுத்தவரையில் பௌத்த மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல.

எனவே இவ்வறான வேலைகளில் ஈடுபடுவோர் இவற்றினை நிறுத்தி; மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடவேண்டும் எனக் கோரிக்கை விட விரும்புகிறேன்.  அதே நேரம், இவ்வாறான மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் செற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் குறித்து அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கோள்கிறேன்.

எம்மைப் பொறுத்தவரையில் தமிழரின் பாரம்பரிய விழுமியங்களையும், பாரம்பரியங்களையும் விட்டுக்கொடுப்பதற்கோ, இதன் ஊடாக பிரதேசங்களை துண்டாடுவதற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்க மாட்டாது.