மட்டக்களப்பு மாவட்டத்தில் பூகோள தகவல் முறைமை தொடர்பான பிரயோகப் பயிற்சி நெறி இன்று திங்கட்கிழமை காலை மட்டக்ளப்பு மாவட்ட செயலக கணணி ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.
உலக வங்கியின் நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தில் மண்முனை வடக்கு, போரதீவுபற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தலைமையில் நடைபெற்ற இப் பயிற்சி நெறியில், பூகோள முறைமையில் விசேட நிபுணர்களான எஸ்.சசிதரன், நிலுக்க, பி.தேவ சஞ்சீவ ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
3 நாட்கள் நடைபெறும் இப் பயிற்சி நெறியில், திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செலயக பட்டதாரிப் பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.
இப் பூகோள தகவல் முறைமை பயன்படுத்துதல் மூலம், அந்தப்பிரதேசத்தின் உட்கட்டமைப்புத் தகவல்கள், அனர்த்த அபாய தகவல்கள் உள்ளீடு செய்தல் மூலம் எதிர்காலத்தில் அனர்த்த நிலைமைகளின் போது விரைவாக மக்களை பாதுகாக்கக் கூடிய கட்டமைப்புக்கு உதவியாக இருக்கும்.
இலங்கையில் அனர்த்தத்துக்குட்படும் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 2ஆவது இடத்தில் உள்ளது என்றவகையில், உலக வங்கி முன்வந்து இத்திட்டத்தினை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.