இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிராற்றே லோகன் நேற்றைய தினம் பகல் (செவ்வாய்க்கிழமை) கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது, கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா, பதிவாளர் கே.மகோசன், கலை கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.செல்வராஜா, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் திருமதி முத்துலட்சுமி வினோபாவா, விவசாய பீட பதில் பீடாதிபதி கலாநிதி என்.சிவராஜா உள்ளிட்டோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின் போது, நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிராற்றே லோகன் கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், விதவைகள், பிள்ளைகளின் வாழ்வாதார தொழில்வாய்வாய்ப்புக்கள், கல்வி நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக உபவேந்தர் தெரிவித்தார்.

அத்துடன், பல்கலைக்கழகம் சமூகத்திற்காக முன்னெடுக்கும் திட்டங்கள், அது சார்ந்து சமூகத்தின் ஒத்துழைப்புகள், எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ள நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் கிராற்றே லோகனுடன் தூதரகத்தின் அதிகாரிகள் சிலரும் வருகை தந்துள்ளதுடன், இன்றைய தினமும் பலரையும் சந்திக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.