(செந்தூரன்)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடான ர்நுவுஊ நிகழ்ச்சித் திட்ட நிதி அனுசரணையுடன் கொழும்பு கட்புல மற்றும் ஆற்றுகை;கலைக் பல்கலைக்கழகமும், மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
“பயிலரங்குடன் ஒருங்கிணைந்த பன்மை பண்பாட்டு பரிமாற்ற நிகழ்வும், கட்புலக்கலைக் கண்காட்சியும்” என்னும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் அண்மையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இரு நாட்கள் இடம்பெற்ற இசை, நடன மற்றம் கட்புல பயிற்சிப் பட்டறைகளில் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டதோடு இப்பயிற்சிப் பட்டறைகளினூடாக ஆடல் , பாடல், ஓவியம், சிற்பம் முதலிய படைப்பாக்கங்களை இணைந்து உருவாக்கியிருந்தனர்.
இறுதி நாள் இடம்பெற்ற நிகழ்த்துகை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் சிங்கள பாரம்பரிய கலையம்சங்களான நாடகம், தெதட்டவளலு, பிரசஸ்டி போன்ற இசை வடிவங்களும் மகுள்பெற,பூஜா நடனம், லீக்கெலி போன்ற நடனங்களும் ஆற்றுகை செய்யப்பட்டன.
இதேபோல் தமிழ் பாரம்பரிய கலையம்சங்களான கூத்து, கரகம், கோலாட்டம், நாட்டார் பாடல்கள்; என்பனவும் ஆற்றுகை செய்யப்பட்டதோடு, தமிழ் மற்றும் சிங்கள பண்பாட்டை வெளிக்காட்டும் சிற்பங்களும், ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி .கி. கோபிந்தராஜா, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி. க..பிரேமகுமார், சிரேஸ்ட உதவிப்பதிவாளர் எ.ஜே. கிறிஸ்டி, பேரா.சி.மௌனகுரு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், சே. இராசதுரை மற்றும் கொழும்பு கட்புல மற்றும் ஆற்றுகைக் கலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. ஜயசேன கொற்றகொட , பதிவாளர் டீ.ஆ. டயசேன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.












