அம்பாறையில் கொள்ளைகளில் ஈடுபட்டவர் கைது

அம்பாறை தீகவாவி பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பணம், கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையிட்ட ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தீகவாவி பாடசாலை சந்தியில் உள்ள குறித்த வீட்டில் ஒருவரைத் தவிர ஏனையவர்கள் கடந்த 26ம் திகதி புதன்கிழமை பொசன் நிகழ்வுக்காக விகாரைக்கு சென்றுள்ளனர்.

இதன்போது இரவு 11.00 மணியளவில் வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் சம்பாசனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டினுள் புகுந்து அலூமாரியில் இருந்த 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஒன்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளின் இலக்கங்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட இங்குராணை முகங்காவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வங்கி ஊழியரின் மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வங்கியில் கடமையாற்றும் ஊழியர் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு வங்கி வாகன தரிப்பிடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் பிற்பகல் 1.00 மணியளவில் மதிய போசண இடைவேளைக்காக வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அங்கிருந்து திருட்டுப்போயுள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.

வங்கி பாதுகாப்பு கமராவில் மோட்டார் சைக்கிளை திருடியவரின் உருவம் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளை திருடிய அக்கரைப்பற்று ஹாயா வீதியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் திருத்தும் மெக்கானிக்கான 33 வயதுடைய ஒருவர் கைதானார்.