வடக்கு கிழக்கில் சிங்களவர்கள் வந்தேறு குடிகளே –அரியம் எம்.பி.

(நடனம்)

வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழ்பேசும்  மக்களுடையது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நிலைப்பாடு ஒன்றுதான் எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒட்டு மொத்த கருத்தில் இருந்து மாறு படாது, வடகிழக்குத் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று கிடைக்கும்போது முஸ்லிங்களையும் உள்வாங்கியதாகத்தான் இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


எம்.ஆர்.சீ.நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி அண்மையில் கல்முனையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இந்நிகழ்வில் அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன் மற்றும் மு.இராஜேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் போது அது முஸ்லிங்களையும் உள்ளடங்கியதாக இருக்கும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களின கருத்தாகவே இருக்கின்றது.

ஆனால் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மத்தியில் தமிழ் மக்களுடன் இணைந்து தீர்வைப் பெறவேண்டும் என்று உள்ளம் நினைத்தாலும் உதடு சொல்ல மறுக்கிறது அதற்கான காரணம் அரசுடன் இருந்து சலுகைகளைப் பெறுகின்ற போது அவர்கள் உள்ளத்தில் இருப்பவற்றை வெளிக்கொண்டுவரத்தயங்குகின்றனர். இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில்தமிழ் முஸ்லிங்கள் இணைந்தே அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்.

வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பூர்வீகமாகவே வாழ்ந்துவந்துள்ளனர். ஆனால் சிங்களவர்கள் அவ்வாறு அல்ல வேறு இடங்களில் இருந்து வந்தேறு குடிகளாகவே உள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.