13வது திருத்த சட்ட மூலத்தினை அகற்றும் நடவடிக்கையை நான் எப்போதும் எதிர்க்கின்றேன்.இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் எனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
புட்டிருப்பு தேசிய பாடசாலையில் மூன்று மாடிக்கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று தமிழர்கள் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவேண்டுமானால் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் தங்களை பலப்படுத்தவேண்டும்.அதன் மூலமே நாங்கள் பலம்பெற்று சமூகமாகமாறமுடியும்.
எங்களை இங்கிருந்து யாரும் அகற்றமுடியாது.குடியேற்றங்களை செய்யமுடியாது.நாங்கள் பலம்பெரும்போதே நாங்கள் எம்மை பலப்படுத்திக்கொள்ளமுடியும்.
புhடசாலைகளில் தொழில்நுட்பட கல்வியை அறிமுகம் செய்யும் திட்டத்தின் கீழ் முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமே உள்ளீர்க்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் கல்வியமைச்சரை சந்தித்து எனது ஆட்சேபனையை தெரிவித்தேன்.நாங்கள் முஸ்லிம் பாடசாலைகளை உள்ளீர்த்ததை எதிர்க்கவில்லை.அதில் தமிழ் பாடசாலைகளை உள்ளீர்க்காமை தொடர்பிலேயே எனது ஆட்சேபனையை தெரிவித்தேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதமானவர்கள் தமிழர்கள் உள்ளபோது ஒரு தமிழ் பாடசாலை கூட உள்ளீர்க்கப்படாதமை தொடர்பில் கல்வியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கையெடுக்குமாறு செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதன் கீழ் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இந்த தொழில்நுட்ப கல்வி பாடத்தினை அறிமுகம் செய்வதற்கு கல்வி அமைச்சு அனுமதியளித்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் இதற்காக பட்டிருப்பு தேசிய பாடசாலை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் வறுமையான மாவட்டமாகவுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.அனைத்து வளங்களும் கொண்ட இந்த மாவட்டத்தில் இந்த நிலையேற்பட்டுள்ளது.இதுதொடர்பில் அனைவரும் சிந்திக்கவேண்டும்.