முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

திருகோணமலையில் CATALYZE திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்


திருகோணமலை மாவட்டத்தில் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளை மேம்படுத்துவதன் ஊடாக மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள CATALYZE திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (20) திருகோணமலையில் அமைந்துள்ள JKAB Park Hotel இல் நடைபெற்றது.

கிரிசலிஸ் நிறுவனத்தின் திட்ட மற்றும் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் யூ.எல்.சம்சுதீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 08 பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்போது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்கள் விசேட உரையாற்றியதுடன், திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்படவுள்ள பகுதிகள் மற்றும் தெரிவு அளவுகோல்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் 120 சிவில் சமூக அமைப்புகளின் ஆற்றல்கள் மேம்படுத்தப்படுவதுடன், பெண்கள் மற்றும் இளைஞர்களின் தலைமைத்துவம், காணி உரிமைகள், வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 1.5 மில்லியன் யூரோ நிதியுதவியுடன், CARE Germany  நிறுவனத்தின் தலைமையில், Chrysalis மற்றும் Law & Society Trust (LST) ஆகிய நிறுவனங்களின் இணைப்பில் 2026 மார்ச் முதல் 2029 பெப்ரவரி வரை 36 மாத காலத்திற்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக சமூகத் தலைவர்களுக்கான பயிற்சிகள், கொள்கை ஆய்வுகள், மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஊடகத்துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நேரடிப் பயன்களை வழங்குவதுடன், மக்கள் பங்கேற்புடனான பொறுப்புக்கூறல் மிக்க ஆட்சிமுறையை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் குறித்த துறைசார்ந்த அரச அதிகாரிகள், திட்ட மற்றும் வடக்கு பிராந்திய முகாமையாளர் எம்.பிரபாகரன், சிரேஷ்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் எச். எம். ஜவாஹிர், திட்ட ஒருங்கிணைப்பாளர் எம். ஹர்ஷாயினி, திருகோணமலை மாவட்டத் திட்ட உதவியாளர் ஏ.எம். ஆசிக், அம்பாறை மாவட்டத் திட்ட உதவியாளர் எஸ். ஜெயப்பிரதாப் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத் திட்ட உதவியாளர் எஸ். லக்ஷிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.