முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

மட்டக்களப்பில் "வாழ்க்கையை தேர்ந்தெடுங்கள் - எதிர்காலத்தை தேர்ந்தெடுங்கள்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கண்காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி


மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் நோக்கில், போதையற்ற மட்டக்களப்பைக் கட்டியெழுப்புவோம் எனும் நோக்கில் விழிப்புணர்வுக் கண்காட்சி எதிர்வரும் 27.11.2026 அன்று காத்தான்குடி கடற்கரையில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

'முழு நாடும் ஒன்றாக' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்  அவர்களின் தலைமையில் நேற்று (20) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையில், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான ப. தினேஸ் மற்றும்  சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். ரசூல்ஷா ஆகியோரின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் சமூக மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் தொடர்பான விளக்கக் காட்சிகள், விழிப்புணர்வு வீதி நாடகம், நடைபவனி மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஆலோசனைச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் கண்காட்சியின்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

இக்கலந்துரையாடலில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், மாவட்ட தொற்றா நோய்த் தடுப்பு அதிகாரி எம். ரூதேசன், உதவிப் பிரதேச செயலாளர்கள், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,  மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்

வி. ஜெகன், பிரம்ம குமாரிகள் அமைப்பின் பிரதிநிதிகள், மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.