சர்வதேச ஆசிரியர் தினம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்யாலயத்தில் இவ்வாண்டிற்கான உலக ஆசிரியர் தின விழா, மாணவர்களும் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்தமைக்கமைய இன்று (06) வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலையின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, காலை வேளையில் சிறப்பு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
விழாவின் முக்கிய நிகழ்வாக, பாடசாலையில் கல்விப் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மாலை அணிவித்து, சிறப்பு கௌரவம் அளித்தனர்.
பாடசாலைச் சமூகத்தின் இந்த நெகிழ்ச்சியான வரவேற்பும் கௌரவிப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாக அமைந்ததோடு, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் மனங்களையும் நெகிழ வைத்தது.
