மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் தேற்றாத்தீவு சிவகலை மகா வித்தியாலயமும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு


மட்டக்களப்பு,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் தேற்றாத்தீவு சிவகலை மகா வித்தியாலயமும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

இன்றைய தினம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் தேற்றாத்தீவு சிவகலை மகா வித்தியாலயமும் இணைந்து இந்த தினத்தினை விசேடமாக நடாத்தியது.

பாடசாலையின் அதிபர் இ.புவனேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் சிறுப்பு அதிதிகளாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர்,பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின்போது அதிதிகளை பாடசாலையின் ஆசிரியர்கள் பாண்ட் வாத்தியங்கள் இசைத்து அழைத்துவந்ததுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்த நிகழ்வின்போது சர்வதேச முதியோர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் 100வயதை கடந்துள்ள பாடசாலையின் ஸ்தாபகர் கார்த்திகேசு இராசையா பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

இதன்போது சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வீடற்ற,பாதிப்பு நிலையில் உள்ள சிறுவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் மூன்று சிறுவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான காசோலைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் சிறுவர் தினத்தினை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்வுகள் சிறுவர்களினால் நடாத்தப்பட்டதுடன் இதன்போது சிறுவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.