போரதீவுப்பற்று உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் சிறுவர் பூங்கா அடிக்கல் நாட்டு விழா!


மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோவில் போரதீவு வட்டாரத்தில் உள்ள உதயதாரகை கலை விளையாட்டு மைதானத்தில் புதிய சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சுபவேளையில் நேற்று(10.10.2026)சிறப்பாக இடம்பெற்றது.

​கோவில் போரதீவு வட்டார பிரதேச சபை உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் அவர்களால் மாதாந்த சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடிப்படையில், தவிசாளரின் தொடர் முயற்சியின் பலனாக PSDC வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

​போரதீவு பற்று பிரதேச சபையின்  தவிசாளர் வி.மதிமேனன் தனிப்பட்ட வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், அவரின் பணிப்புரையின் பேரில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய, உபதவிசாளர் த.கயசீலன், கோவில் போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் மற்றும் சின்னத்தை வட்டார உறுப்பினர் கா.யோகராசா ஆகியோரின் பங்களிப்புடன்நேற்று(10.10.2026) நண்பகல் 12.00 மணியளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

​உதயதாரகை கலை விளையாட்டு கழகத்தின் தலைவர் ம.கோகிலராஜ் (கோபி) அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், கிராமத்துச் சிறுவர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கிராமத்துச் சிறுவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பணிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.