நாட்டின் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தான்னம் தொடர்பில் அம்பர்' நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (07) திங்கட்கிழமை காலை 11:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, இன்றையதினம் இரவு 11:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பலத்த மின்னலுடன் கூடிய பலத்த இடிமழை பெய்யக்கூடும்.
இடிமழையுடன் கூடிய வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடி மின்னலினால் ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடி மின்னல் நிகழும் போது திறந்தவெளிகளிலோ, மரங்களின் அடியிலோ நிற்பதைத் தவிர்க்கவும்.
வயல்வெளிகள், தேயிலைத்தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகளில் இருப்பதைத் தவிர்த்துப் பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் செல்லவும்.
தொலைக்காட்சி, கணினி உள்ளிட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகைகள் மற்றும் மரங்களின் அருகே வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
