சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் உத்தியோகபூர்வ காலப்பகுதி நிறைவடைந்ததும், அதிலிருந்து விலகுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஆண்டின் மார்ச் மாதத்துடன் குறித்த ஒப்பந்தத்தின் கால அவகாசம் முடிவடையும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய ஒப்பந்தம் எதனையும் கையெழுத்திடுவதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில நிபந்தனைகள் மக்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளமையே இத்தீர்மானத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
திறைசேரியில் போதிய நிதி காணப்பட்ட போதிலும், இந்த ஒப்பந்தத்தின் கடுமையான நிபந்தனைகள் காரணமாக மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய ஒப்பந்தத்தை இடையில் முறித்துக்கொள்ளாமல், அதன் குறிப்பிட்ட காலப்பகுதி நிறைவடைந்ததும் புதிய ஒப்பந்தத்தில் இணையாமல் இருப்பதற்கே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இது தொடர்பில் மறைமுகமான குறிப்பொன்றை வழங்கியுள்ளார். அதாவது, எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியில் இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும், அதன் பின்னர் பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான பிமல் ரத்நாயக்கவும் கடந்த வாரம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, எதிர்வரும் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் நிச்சயமாக விலகும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
அதேவேளை, மக்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை நீக்கி புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் இப்பொழுதே சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்பிருந்தே வலியுறுத்தி வந்தார்.
தேவைப்படின் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக சர்வதேச பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகக் கூடும் என்றும், அது இலங்கைப் பொருளாதாரத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்பொன்றின் உதவி இலங்கைக்கு அவசியமானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
