பஸ் நிறுத்தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை


பொதுப் போக்குவரத்து பஸ்கள் நிறுத்தும் இடங்களை மறைக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தும் அல்லது விட்டுச் செல்லும் சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பஸ் நிறுத்தங்களில் ஏனைய வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பஸ்களை வீதியின் நடுவே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இது போக்குவரத்து நெரிசலை அதிகரிப்பதோடு, பஸ்களில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் உருவாக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையும் உருவாவதாக சுட்டிக்காட்டிய பொலிஸார்இ

தற்போது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் பயணம் செய்யக்கூடிய பஸ் சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், பஸ் நிறுத்தங்களில் அப் பஸ்களை நிறுத்துவதற்கு ஏதுவாக எவ்வித தடைகளும் இன்றி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், பஸ் நிறுத்தத்தை அணுகுவதற்கு 30 மீற்றருக்குள்ளும் வெளியேறும் திசையில் 15 மீற்றருக்குள்ளும் வாகனங்களை நிறுத்துவது அதன் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பஸ் ஒதுக்கிடங்கள்  கொண்ட பஸ் நிறுத்தங்களில் அணுகும் திசையில் 15 மீற்றருக்குள்ளும், வெளியேறும் திசையில் 10 மீற்றருக்குள்ளும் ஏனைய வாகனங்களை நிறுத்துவது அவ்வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறி, குறிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்  சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.