குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் நீண்டகாலமாகக் காணி அனுமதிப்பத்திரம் இன்றி வாழ்ந்து வந்த 33 பயனாளிகளுக்குக் காணி அனுமதிப்பத்திரங்களும், 'உறுமய' திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்குக் காணி உறுதிகளும் உத்தியோகபூர்வமாக நேற்று (12) குச்சவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், ஜனாதிபதியின் நிதியத்திலிருந்து புல்மோட்டை மற்றும் இறக்ககண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூபா 5,50,000 பெறுமதியான நிதி உதவியும் இதன்போது கையளிக்கப்பட்டது.
குச்சவெளி பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், பிரதேச செயலாளர் யூ. எல். சியாஉல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரிமங்களையும் நிதி உதவிகளையும் வழங்கி வைத்தார்.
தங்களின் நீண்டகாலக் கனவான காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உறுதிகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், அரசாங்கத்திற்கும் பிரதேச செயலகத்திற்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


























