2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இப்பரீட்சை செப்டம்பர் (05)ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள்ளடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
பரீட்சை ஆரம்பமாவதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள்,புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால், பரீட்சார்த்திகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பரீட்சைத் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






