மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்காலிகள் (Special modified wheel chairs) வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி. சந்திரகலா கோணேஷ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தின் இணைப்பாக்கத்தில் நேற்று (16) இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விசேட தேவைக்குட்பட்ட 11 சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்காலிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் 9820 மாற்றுத் திறனாளிகளில் 435 பேர் பிறப்பிலிருந்து 11 வயதெல்லைக்குள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்ட செயலகத்தினால் இவர்களுக்கான பல்வேறு பட்ட உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது ஒரு மில்லியன் பெறுமதியான சாதனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான அனுசரனையினை புகலிடம் என்ற நிறுவனத்தினர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கான திருமாவட்ட சபை தலைவர் அருட்பணி சாமுவேல் சுபேந்திரன், நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ஜெகன் ஜீவராஜ் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தின் விசேட தேவைக்குட்பட்ட குழந்தைகளின் சுகாதார மற்றும் கல்வி மேம்படுத்தல் விடயங்களில் புகலிடம் நிறுவனம் ஆற்றி வரும் சேவைகள் மிகவும் காத்திரமானவையாகும்.








