கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த வகுப்பறைப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையவுள்ள புதிய இரு மாடிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (11) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். அனீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை உத்தியோகபூர்வமாக நாட்டி வைத்தார்.
கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதி ஒதுக்கீட்டின் (PSDG) கீழ்சுமார் 29 மில்லியன் ரூபா செலவில் 25 x 90 அடி நீள, அகல பரிமாணங்களைக் கொண்டதாக இந்த இரண்டு மாடி வகுப்பறைக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
இவ்விழாவில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா நகரசபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி அமைப்பின் உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அதிதிகள் இணைந்து புதிய கட்டடத்திற்கான அடிக்கற்களை நாட்டி வைத்ததைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


