முல்லைத்தீவில் முள்ளியவளைப் பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த உயர்தர வகுப்பு மாணவியொருவரின் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (05.05.2026) மாலை 3.30 மணியளவில், முள்ளியவளையிலிருந்து வற்றாப்பளை நோக்கி தனது துவிச்சக்கர வண்டியில் மேலதிக வகுப்பிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இலக்கத் தகடுகள் அற்ற, விலையுயர்ந்த NS' ரக மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இரு இளைஞர்கள், ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் வைத்து மாணவி அணிந்திருந்த சுமார் முக்கால் பவுண் தங்கச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதே பகுதிக்கு அண்மையில், கடந்த வாரமும் கடையொன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் சங்கிலி பறிக்கப்பட்டிருந்தது. குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவது குறித்து பிரதேச மக்கள் கடும் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாகத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டும் பொதுமக்கள், குற்றவாளிகளைக் கண்டறிய பொலிஸார் போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறி வருவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்றைய சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சந்தேகநபர்களை அடையாளம் காணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து நிழற்குடைகள் மற்றும் வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் குறித்து பொலிஸார் தீவிர ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.