வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலக கிராம அபிவிருத்திப் பிரிவு நடாத்தும் ஆடை வடிவமைத்தல் மற்றும் அழகுக்கலை மனைப்பொருளியல் உற்பத்திப் பொருட்களின் மாவட்ட கண்காட்சியும் விற்பனையும் இன்றைய தினம்(06.05.2026) மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. அம்பலவாணர் சோதிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினராக கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி கஜானி பார்த்தீபன் அவர்களும், கெளரவ விருந்தினராக Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் விருந்தினர்களால் கண்காட்சிக் கூடங்கள் நடாவினை வெட்டி ஆரம்பிக்கப்பட்டு பார்வையிடப்பட்டதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரங்க நிகழ்வு ஆரம்பமானது.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து, வரவேற்புரை உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா் ஷினி அவர்களாலும், தலைமையுரை மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களால் ஆற்றப்பட்டது.
தொடர்ந்து இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கந்துகொண்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது உரையில், இவ் மாவட்ட கண்காட்சி நிகழ்வானது நீண்ட காலத்துக்கு பின்னர் அதாவது 10 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவது மகிழ்ச்சியான விடயம் எனவும், பெண்கள் சர்வதேச ரீதியாக இன்றைய உலகில் சாதனை படைத்து வருகின்றார்கள் எனவும், அந்தவகையில் கிராமங்களிலுள்ள பெண்கள் பொருளாதார ரீதியாக உயர வேண்டும் எனவும், அதற்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் பயிற்சி நெறிகள் மூலம் அவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கிராமங்கள் அபிவிருத்தி அடைந்தால் மாவட்டம் அபிவிருத்தி அடையும் அதனைத் தொடர்ந்து மாகாணம் அபிவிருத்தி அடைந்து நாடு அபிவிருத்தி அடையும் எனவும், எனவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு கிராம அபிவிருத்தியே அடித்தளமானது எனவும் தெரிவித்தார். மேலும், இன்றைய சமூகத்தில் பெண்கள் பிரதான பங்களிப்பினை ஆற்றி வருகின்றார்கள் எனவும், கல்வித் துறையிலும் சரி அரசு துறையிலும் சரி பெண்களின் பங்களிப்பு காத்திரமாக உள்ளது எனவும், கிராமத்தினையும் பெண்களின் பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் அப் பிரதேசம் அபிவிருத்தி அடையும் எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு மனித வாழ்க்கையில் ஆடை வடிவமைப்பு, மனப் பொருளியல் மற்றும் அழகுக்கலை முக்கியத்துவம் பெறுகின்றது எனவும், மாறி வரும் உலகில் இதன் வடிவங்களோ வகைகளோ மாறினாலும் இம் மூன்றும் மாறாது எனவும், அந்தவகையில், கிராம அபிவிருத்தி திணைக்களம் ஒரு முதுகெலும்பாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். இன்றைய நிகழ்வினை மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்த மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ரா சுதாகரன் அவர்களுக்கும் அவருடைய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் இன்றைய பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்கள் மேலும் தமது திறனை வளர்க்க மேலதிகப் பயிற்சிகளையும் பெற்று சுய தொழிலில் ஈடுபட்டு பொருளாதார ரீதியாக வளம் பெற்று சிறக்க தமது வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. அம்பலவாணர் சோதிநாதன் தனது உரையில், கிராம அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு கிராமம் சார்ந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்திவருவதாகவும், மகளிருக்கான தொழில்வாண்மைக்காக நீண்ட காலமாக பயிற்சி வழங்கிவருவதாகவும், ஆடை வடிவமைப்பு, அழகு கலை போன்றவற்றுக்கான கேள்வி சமூகத்தில் பெருமளவில் இருக்கின்றது எனவும், அதனால் இவ் வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், 06 மாத பயிற்சி ஒரு வருடமாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இப் பயிற்சி நெறி மூலம் கிராம ரீதியாக - சமூகத்தில் பொருளாதார ரீதியாக உயரமுடியும் எனவும் குறிப்பிட்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்து, தமது அமைச்சு சுய தொழிலுக்கும் உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார்.
பிரதேச செயலக ரீதியாக நடைபெற்ற ஆடை வடிவமைப்பு, கேக் ஐஸ்சிங், அழகுக் கலை, அலங்கார பூக்கள் வடிவமைப்பு, சமையல் கலை உள்ளடங்களாக15 வகையான ஒரு வருட பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ள 237 மாணவர்களுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசில்களும், பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான டிப்ளோமாச் சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், உற்பத்தி பொருட்கள் போட்டியில் முதலாம் இடம் கோப்பாய் சரஸ்வதி தயாரிப்பு சங்கமும், இரண்டாவது இடம் காரைநகர் மத்திய மாதர் அபிவிருத்தி சங்கமும், மூன்றாம் இடம் கரவெட்டி இமையாணன் மத்திய கிராம அபிவிருத்தி சங்கமும் பரிசில்களை பெற்றுக்கொண்டதுடன், ஒட்டு மொத்தமாக இன்றைய கண்காட்சியில் யாழ்ப்பாண பிரதேச செயலகம் அதிகளவில் பங்குபற்றியமைக்கான சிறப்புப் பரிசிலைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Fairmed Foundation இணைப்பாளர் டாக்டர் நயனி சூரியாராச்சி அவர்களால் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் கேக் ஐசிங் பயிற்சி நெறிக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இந் நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி நிலைய மாணவர்களின் கோலாட்டம், சிறப்பு நடனங்கள், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந் நிகழ்வின் இறுதியில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ரா சுதாகர் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது.







