தாயக மக்களின் விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்! - வளைகுடா வானம்பாடிகள் அமைப்பு அறை கூவல்!

 


தாயக மக்களின் விடியலுக்காக தொடர்ந்து பயணிப்போம்! -  வளைகுடா வானம்பாடிகள் அமைப்பு அறை கூவல்!


தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் விடியலுக்காக இன,மத, மொழி பேதங்களை கடந்து உதவிகளை வழங்க முன்வருமாறு 

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.


வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் நான்காவது ஆண்டில் கால் பதிக்கும் இந் நன்னாளில் அதன் தலைவர் கர்ணன் கனகரெத்தினம் 

அவர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.


உயிரினும் மேலான என் தமிழுக்கு சிரம் தாழ்த்திய வணக்கம்.


"மாங்கிளியும் மரம் கொத்தியும் வீடு திரும்ப வழியில்லை"  என்றாலும் தாயகத்தில் உள்ள எமது உறவுகளுக்காக அவர்களது வாழ்க்கையில்   மறுமலர்ச்சியை   ஏற்படுத்தும் நோக்கோடு வளைகுடாவில்  பணி புரியும் எமது தோழர்களினால் சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு உதவிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட 

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பானது தனது நான்காவது ஆண்டில் காலடி வைக்கிறது.


நாடு கடந்து தொலை தூரம் சென்று எமது குடும்ப பொருளாதாரத்திற்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மிக கடினமாக உழைக்கும் தோழர்களின் வியர்வை துளிகளில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை  மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சேகரித்து தாயகத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு இன,மத,மொழி பேதங்களை கடந்து  மக்களின் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டிற்கான உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.


மத்திய கிழக்கில் சிதறிக் கிடந்த தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியதே "வளைகுடா வானம்பாடிகள்" அமைப்பாகும். இதன் சுலோகமாக "உறவுகளின் உறுதுணை" என்றும். குறிக்கோளாக " அறிவார்ந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம் " என்ற எண்ணக் கருவுடன் ஆரம்பித்த இவ்வமைப்பு ஒவ்வொரு மனிதனின் மாண்புகளை வளர்த்திடும் "அறநெறி பாடசாலை" களின் வளர்ச்சிக்காக தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது.அதன் பிரகாரம் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் சைவ, கிறிஸ்தவ(மறைக்கல்வி)பௌத்த

(த(D)ஹம்)அறநெறி பாடசாலைகளை நடாத்தி வருவது...எமது அமைப்பின் அங்கத்தவர்கள், நன்கொடையாளர்களின் அயராத பங்களிப்பென்று கூறுவதில் மிகையாகாது. 


இந்த நான்கு மாவட்டங்களிலும் 37 பாடசாலைகளுக்கு தேவை ஏற்படும் நேரங்களில் கற்றல் உபகரணங்களும், ஒவ்வொரு ஞாயிறுதோறும் காலையுணவும் வழங்கப்பட்டு வந்தது. கடந்த வருடம் எமது அமைப்பின் இறுக்கமான புதிய திட்டங்களையும்,நிதி கட்டமைப்புகளையும் விரும்பாத 19 பாடசாலைகள் தாமாகவே நிறுத்திக் கொண்டனர். எமது அமைப்பை பொறுத்தவரை ஒவ்வொருவர் கொடுக்கும் பணத்திற்கும் பொறுப்புக் கூறுவதை முக்கிய விடயமாக கொண்டுள்ளோம்.


எமது அமைப்பின் ஏனைய வேலைத்திட்டங்களாக பல்கலைகழகம், சாதாரண கல்வியை தொடரும் ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களுக்கும் உதவியளிக்கின்றோம்.அது மட்டுமன்றி சில பாடசாலைக்களுக்கு  மாணவர்களின் கல்வி ஊக்குவிக்கும் முகமாக கிராமிய பாடசாலைகளுக்கு அறிவுத்திறன் போட்டிகளை நடாத்தி பரிசில்களும் வழங்கி வைத்துள்ளோம். அண்மையில் இயற்கை அன்னையின் சீற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட குறிப்பாக மலையக மக்களுக்கு 20லட்சம் ரூபாய் பெருமதியான புதிய உடுத்துணிகள் ( நன்கொடையாளர் மூலமாக) வழங்கி வைத்தோம். இதுபோன்ற அளப்பெரிய சேவைகளை ஆற்றிவரும் வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பு தனது நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது என்பதனை மகிழ்வுடன் கூறிக்கொள்கின்றேன். என தெரிவித்துள்ளனர்.