நாளை முதல் எதிர்வரும் 15.10.2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இடையிடையே மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2025/2026 காலபோக நெற் செய்கையில் புழுதி விதைப்பை மேற்கொண்டவர்களுக்கும் மேற்கொள்ள இருப்பவர்களுக்கும் இம்மழை பயனுள்ளதாக அமையும்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு இவ்வருட வடகீழ்ப் பருவக்காற்று மழை ஒக்டோபர் மாதம் 23 ம் திகதி அளவில் ஆரம்பமாகும். இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்றின் உடைவு தாழமுக்கத்தோடு ஆரம்பமாகும். இதனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை 05 தாழமுக்க நிகழ்வுகள் வங்காள விரிகுடாவில் தோன்றும் வாய்ப்புள்ளது. இதில் இரண்டு தாழமுக்கங்கள் புயலாகவும் மாற்றமடையும் வாய்ப்புள்ளது. இதனால் நவம்பர் மாதத்தின் 20ம் திகதி முதல் டிசம்பர் மாதத்தின் 15 ம் திகதி வரை செறிவான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே இவ்வாண்டின் காலபோக நெற் செய்கையின் சேற்று விதைப்பை மேற்கொள்ளும் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு மேற்கொள்வது செறிவான கனமழை மூலம் நெற்பயிர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கும். விவசாயிகள் இது தொடர்பாக நெற்செய்கையோடு தொடர்புடைய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்படுவது சிறந்தது.
- நாகமுத்து பிரதீபராஜா -