மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும் அறவீடு-பொதுமக்கள் ஆதரவு வழங்க கோரிக்கை


மட்டக்களப்பு மாநகர சபையினால் கடந்த வருட  நிலுவைகளில் உள்ள சோலைவரி மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான வரிகளை அறவிடும்  பணிகள் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இன்று (06) ஆரம்பமாகியுள்ளது.கடந்த வருடங்களில் மாநகர சபையின் 20 வட்டாரங்களில் செலுத்த வேண்டிய வரிப்பணம் 90 மில்லியன் நிலுவையுள்ளதனால் அவற்றை அறவிடும் வகையில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஐந்து  குழுவாக பிரிக்கப்பட்டு அதனை அறிவிடுவதற்கான பணிகள் இன்று ஆரம்பமானது.

மேலும் கடந்த வருடங்களான 2022, 2023, 2024 ஆண்டுகளில் மட்டும்  62 மில்லியன் நிலுவை அறவிடாது காணப்படுவதாக மாநகரசபையின் முதல்வர் தெரிவித்தார்.

மக்களின் வசதிகருதி மக்கள் வீடுகளுக்கு மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சென்று நிலுவைகளை அறவிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது மாநகர சபையினால் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், தின்மக்கழிவு முகாமைத்துவம், வீதி அமைத்தல், மின் விளக்குகளை பொருத்துதல்,  பாதிக்கப்பட்ட வீதிகளை செப்பணிடுதல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும் மாநகரசபை எல்லைப்பகுதியினுல் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டத்தை தவிர்ப்பதற்கு மாடுகள் வளப்பவர்களுக்கான  விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மேலும் வீதியோர வியாபாரத்தினை தடுப்பதற்கு தேவையான ஆலோசனை வழங்கி வருவதாக மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில்  பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார், மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன், கணக்காளர்கள், நிருவாக உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.