ஸ்ரீ திரௌபதை அம்மன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ தாந்தா மலை முருகன் ஆலயத்திற்கான புனித பாதயாத்திரை


(சுமன்)

மட்டக்களப்பு, புளியந்தீவு ஸ்ரீ திரௌபதை அம்மன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ தாந்தா மலை முருகன் ஆலயத்திற்கான புனித பாதயாத்திரை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.


புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்புனித யாத்திரையானது புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம், திரௌபதை அம்மன் ஆலயம், புதுநகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், வலையிறவு ஸ்ரீ மடத்துப் பிள்ளையார் ஆலயம், குறிஞ்சாமுனை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், தாண்டியடி ஸ்ரீ முருகன் ஆலயம், வாழைக்காளை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், பனையறுப்பான் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் போன்ற ஆலயங்களில் தரிசிப்புகளை மேற்கொண்டு, பனையறுப்பான் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று இரவு தங்கி நிற்றலுடன் இன்றைய யாத்திரையினை நிறைவுற்று மீண்டும் நாளை காலை பனையறுப்பானில் இருந்து தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலயம் வரையான பாத யாத்திரையினைத் தொடரவுள்ளது.

குறித்த யாத்திரையில் புளியந்தீவு, கொக்குவில், ஊறனி, புதுநகர், சேற்றுக்குடா, வீச்சுக்கல்முனை போன்ற பகுதிகளில் இருந்து பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை இப்பாத யாத்திரை ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீ திரௌபதை அம்மன் நற்பணி மன்றம் ஆரம்பிக்கப்பட்டு முதல் நிகழ்வாக மேற்கொள்ளப்படும் இப்புனித யாத்திரையில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் கந்தனின் கருணையும், அருளும் கிடைக்கப் பிரார்த்திப்பதுடன், எமது யாத்திரைக்காக முன்வந்து உதவி புரிந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள். அத்துடன் குறிப்பாக நாம் மேற்கொள்ளும் பாதயாத்திரையின் போது தரிசிக்கும் ஆலயங்கள், அங்கு எமக்காக தாகசாந்தி அன்னதான வசதிகள் ஏற்பாடு செய்திருக்கும் அவ் ஆலயங்களின் பரிபாலன சபையினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்கும் இவ் யாத்திரையின் பலன் பூரணமாகக் கிடைக்க முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றோம் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.