கிழக்கு மாகாண வைத்தியதுறையில் புதிய அத்தியாயம் பதித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை

கிழக்கு மாகாணத்தின் வைத்தியதுறையின் வரலாற்றில் முதன்முறையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினை முன்னெடுத்து சாதனை படைத்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் மற்றும் மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் மதனழகன்,சிறுநீரக சிகிச்சைப்பிரிவின் தலைவர் டாக்டர் முஜாஹீத் உட்பட இந்த சிகிச்சையில் பங்குகொண் வைத்திய நிபுணர்கள் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி கலாரஞ்சினி,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறுபட்ட சத்திரசிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றது.சிறிய,பெரியளவிலான சத்திரசிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றன.ஒரு வருடத்திற்கு 10ஆயிரத்திற்கும் அதிகமான பெரியளவிலான சத்திர சிகிச்சைகளும் 12500க்கும் அதிகமான சிறிய சத்திசிகிச்சைகளும் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில் இந்த மாதம் 15ஆம் திகதி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அனுமதியைப்பெற்று உhயி முறையில் இந்த மாற்று சிகிச்சை நடைபெற்று இன்று மாற்று சிகிச்சை பெற்றவர் வீடு செல்கின்றார்.
இந்த சிறுநீரக மாற்று சிகிச்சையினை ஒரு குழுவாக செய்து முடித்துள்ளனர்.வைத்தியநிபுணர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் கொழும்பு,அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள விசேட வைத்திய நிபுணர்கள் ஆகியோரின் அனுசரணையுடன் இந்த மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டுள்ளது.
இது கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஒரு மைல்கல்லாக இந்த அறுவை சிகிச்சை காணப்படுகின்றது.இதுபோன்ற சிகிச்சைகளை தொடர்ந்து செய்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.
இந்த சிகிச்சைகளுக்குரிய சில சாதனங்கள் வேறு வைத்தியசாலைகளிலுமிருந்து எடுத்துதான் இந்த மாற்று சிகிச்சையினை செய்தோம்.இந்த சாதனங்களை எங்களது வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்போம்.
இதன்போது கருத்து தெரிவித்த மயக்க மருந்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் மதனழகன்,
சிறுநீரகம் வழங்குபவரையும் மாற்றுபவரையும் பொருத்தமானவர்களா என்பதை சிறுநீரகவியல் நிபுணர் வைத்தியகுழாம் என்பதை பரிசோதனை செய்து அவர்கள் பொருத்தமானவர்கள் என்ற உறுதிப்படுத்தலுடன் சுகாதார அமைச்சின் அனுமதிகள் பெறப்பட்டு அதன்பின்னர்தான் இந்த மாற்று சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை நாங்கள் ஒரு குழுவாக செய்திருந்தோம்.”முதன்முறையாக இந்த பகுதியில் செய்யப்பட்ட சத்திரசிகிச்சை.இந்த மாற்று சிகிச்சையானது ஒரே தடவையில் கொடையாளியிடமிருந்து சிறுநீரகம் எடுக்கப்பட்டு பெறுனருக்கு வைக்கப்பட்டதனால் இரண்டு சத்திரசிகிச்சை கூடங்களில் இரண்டு அணியாக வைத்திய நிபுணர்கள் செயற்படவேண்டிய நிலையிருக்கின்றது.
முதன்முதலாக நாங்கள் ஆரம்பித்துவைத்திருக்கின்ற செயற்பாடு.இது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.இதற்கு சுகாதார அமைச்சு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு உறுதியளித்திருக்கின்றது.
இந்தவேளையில் பொதுமக்களிடம் ஒரு கோரிக்கையினை முன்வைக்கவிரும்புகின்றோம்.இந்த உறுப்பு மாற்று ஒரு உயிருள்ள கொடையாளியிடமிருந்து இன்னுமொரு பெருனருக்கு சென்றது.இது மிகவும் தட்டுப்பாடாகயிருப்பதன் காரணமாக தகுதியுள்ள நபர்கள்,விபத்து காரணமாக மூளைச்சாவு அடைகின்றவர்கள் அவர்களின் உறுப்புகளை தானம் செய்து அதனை எடுத்து பொருத்துகின்ற செயற்பாடு உலகமெங்கும் நடைபெற்றுவருகின்றது.இலங்கையிலும் மிகவும் சிறப்பாக செயற்படுத்தப்பட்டுவருகின்றது.
ஆனால் மிகவும் கவலைக்குரிய விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வாறான சம்பவங்கள் பல இருந்தும் கூட எமது மக்கள் அதற்கு முன்வருவதில்லை.எனவே இனிவரும் காலத்திலாவது அதற்கு முன்வந்து மரணிக்கின்றவர்கள்,மூளைச்சாவு அடைந்திருக்கின்றவர்கள் அதனை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய பின்னர் உறுப்புகளை தானம் செய்கின்ற வாய்ப்பு இருக்கின்றது.அவ்வாறு உறுப்புகளை தானம் செய்கின்றபோது அந்த இறக்கின்றவரின் பெயரினால் இரண்டு பேர் உயிருடன் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.மக்களிடம் மிகவும் வினயமாக வேண்டிக்கொள்வது உறுப்பு தானங்களை மேற்கொள்வதற்கு நீங்கள் முன்வரவேண்டும்.அதற்கான கட்டமைப்பு இந்த போதனா வைத்தியசாலையில் இருக்கின்றது.