வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாங்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை,மூன்றாம் கட்டை,வெருகல் கல்லரிப்பு ஆகிய பகுதிகளிலேயே வனவளத்திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் இந்த அடாவடித்தனத்தினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் உள்ள சுமார் 13கொட்டில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன் பயிர்ச்செய்கைக்காக வைக்கப்பட்டிருந்த கச்சான்,சோளன் வதைகளையும் வனவள திணைக்கள அதிகாரிகள் எடுத்துச்சென்றுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பரம்பரைபரம்பரையாக இப்பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையினை இந்த மக்கள் முன்னெடுத்துவந்துள்ளதுடன் யுத்தகாலத்தின் பின்னர் மீண்டும் பயிர்ச்செய்கையினை சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்னெடுத்துவந்த நிலையில் இப்பகுதியில் வனவள திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியான தொந்தரவுகளை விடுத்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று(26) பிற்பகல் அப்பகுதிக்குள் நுழைந்த வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் மக்கள் சொந்த தேவைக்கு வெளியே போயிருந்த பகுதியில் உள்ள குடிசைகளை தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
நான்காம் கட்டை,மூன்றாம் கட்டை,வெருகல் கல்லரிப்பு ஆகிய பகுதிகளில் இவ்வாறு சுமார் 13குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் விதைப்புக்காக வைத்திருந்த கச்சான்,சோளன் விதைகளையும் வனவளத்திணைக்களத்தினர் கொண்டுசென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சைக்கிள்களில் கச்சான்களை கொண்டு தமது அலுவலகங்களுக்கு ஒப்படைக்குமாறு அப்பகுதியில் சேனைபயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் அவ்வாறு செய்ய மறுத்தவர்கள் மீது தாக்குதல்களும் நடாத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் வாகரை பிரதேச செயலாளர்,மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு ஆகியவற்றின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர்,மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பினால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிதரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது,இது தொடர்பிலான தகவல்கள் தனக்கும் கிடைத்துள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு இது தொடர்பான முழுமையான அறிக்கையினை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த பகுதிகள் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணிகளைக்கொண்ட பகுதியாகவுள்ளது என்பதை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பில் அப்பகுதிக்கு அவர் நேரடி விஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் னவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் நாட்டில் அதிகாரமளிக்கப் பட்டுள்ள அரச அதிகாரிகளினாலையே உயிர் அச்சுறுத்தல் உருவாகும் நிலை காணப்படுகிறது என மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
வலயமைப்பு விடுத்துள்ள கண்டன அறிக்கையில்,
25.02.2025 அன்று 2.00 பிற்பகல் மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவள இலகா பிரிவினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என அச்சுறுத்தியதோடு மூன்று பேருக்கு எதிராக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர் வழக்கு பதிவு செய்வதற்காக. அதுமட்டுமல்லாது குடியிருப்புக்களையும் எரியூட்டியுள்ளனர்.இச் செயற்பாட்டினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது தொடர்பாக கேள்வியுற்று கதிரவெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப்பட்டதுடன் கைவிளங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வதுபோன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.அதன் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் திரு.இசைதீன் அவர்களிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.அத்துடன் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோருக்கும் மேற்படி விடயம் தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதிகளில் வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவுர்களினால் காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்படும்போது அவர்களுக்கு உதவும் வனவளத்திணைக்களத்தினர் தமது சொந்த மண்ணில் பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கும்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதும் அச்சுறுத்துவதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
இது தொடர்பில் அரசாங்கம் வனவளத்திணைக்களம் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி போராடவேண்டிய நிலையேற்படும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.