ஆண்களுக்கான பத்தாயிரம் மீற்றர் ஓட்டத்தில் பல வருடங்கள் தொடர்ச்சியாக வடக்குக் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்று வந்த இவர். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைத் தேசிய விளையாட்டு விழாவில் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றவர்.
போர் மேகம் சூழ்ந்திருந்த அக்காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு குறைந்தபட்ச விளையாட்டுத் தொழில்நுட்ப வளங்களைப் பயன்படுத்தித் தனது அயராத முயற்சியினூடாக ஜெயநேசன் தனது தடங்களைப் பதிவாக்கியிருந்தார்.
தினமும் காலையிலும் மாலையிலும் வெபர் மைதானத்தில் 25 சுற்று வட்டங்களை சீரான வேகத்தில் ஓடி ஓடிப் (பெரும்பாலும் உரிய பாதணியின்றி வெற்றுப் பாதங்களால்) பயின்று தனது வெற்றிக்காக உழைத்தவர்.
மட்டுநகரின் பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் வீரனாக அக்காலத்தில் இவர் தனது திறன்களை வெளிக்காட்டியிருந்தார்.
இவரது வெற்றியைக் கொண்டாடி நாம் மகிழ்ந்த கணங்கள் என்றும் மறக்க முடியாதவை.
இவ்வாறு நமது ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த வீரனை வாழ்த்துவோம்! கொண்டாடுவோம்! அவரைப் போன்ற வீரர்கள் வளர வழி வகுப்போம்!
து கெளரீஸ்வரன்,
25.01.2025