கடந்த 27ம் திகதி வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது இலங்கையின் தென்மேற்காக அரபிக் கடலில் காணப்படுகின்றது. இதன் காரணமாக கடந்த 27ம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்த வேறுபட்ட அளவுகளிலான மழை நாளை (02.01.2025) முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் (31.12.2024) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கன மழை கிடைத்துள்ளது. குறிப்பாக ஏ-9 வீதியின் மேற்கு பகுதிகள் சில 31.12.2024 காலை 6.00 மணி முதல் 01.01.2025 காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 80 மி.மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சியை பெற்றுள்ளன. அந்த வகையில் வெள்ளாங்குளம் 88 மி.மீ., கணேசபுரம் 86 மி.மீ. கல்விளான் 70 மி.மீ., அம்பலப்பெருமாள்குளம் 60.மி.மீ. மல்லாவி 55 மி.மீ., வவுனிக்குளம் 54 மி.மீ. என்ற வகையில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது.
இந்த வருடத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலபோக நெற் செய்கை மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மன்னார் மாவட்டமும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டமும் மிகப் பெரிய அளவில் நெற் செய்கை பாதிப்படைந்துள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டத்தில் பெங்கால் புயலினாலும் புயலுக்கு முன் ஏற்பட்ட தாழமுக்கதினாலும் நெற்பயிர்கள் அழிவடைந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் பெங்கால் புயலினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன.
விதைப்பு நடவடிக்கைகளின் ஆரம்ப காலப் பகுதியில் கிடைத்த கன மழை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியதோ அதேபோன்று அறுவடைக் காலத்திலும் கிடைக்கவுள்ள கன மழை பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
ஏனெனில் எதிர்வரும் 06.01.2025 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதியை அண்மித்தே நகரும் வாய்ப்புள்ளது ( நகர்வு திசையும் இடங்களும் மாற்றமடையலாம்)
நேற்றைய தினம் கிடைத்த கனமழை காரணமாக ஒட்டுசுட்டான், துணுக்காய், பாண்டியன்குளம், பூநகரி, முழங்காவில் இலுப்பைக்கடவை, அக்கராயன் கமநல பிரிவுகளின் குறிப்பிடத்தக்க அளவிலான வயல்களின் நெற்கதிர்கள் வீழந்துள்ளன. பொதுவாக இயந்திரங்கள் மூலமான அறுவடை கணிசமான அளவு சேதங்களை ஏற்படுத்தும். வீழ்ந்து கிடக்கும் நெற்கதிர்களின் அறுவடை என்பது இந்த சேதங்களை இன்னமும் அதிகரிக்கும்.
எதிர்வரும் 06.01.2025 அன்று உருவாகவுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 07.01.2024 முதல் 16.01.2024 வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
எனவே நெல் அறுவடை தொடர்பாக விவசாயிகளுக்கு உரிய அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கவேண்டும். ஏனென்றால் மிஞ்சியிருக்கின்ற நெற்பயிர்களையாவது பாதிப்படையாமல் அறுவடை செய்ய வேண்டிய தேவை உள்ளது.
ஏனெனில் இன்றைய தினம் தமிழ் நாளிதழ் ஒன்றில் வந்த செய்தி மிகவும் கவலையை ஏற்படுத்தியது. நாட்டில் சில வகை அரிசிகளுக்கான தட்டுப்பாடு என்பது துரதிர்ஷ்டமானது. இலங்கை மக்களின் உணவுத் தேவையின் பிரதான வழங்கலை எமது நாட்டின் நெற்செய்கையே பூர்த்தி செய்கிறது. நெற் செய்கையின் தோல்வி என்பது விவசாயிகளுக்கானது மட்டுமல்ல. அது முழு நாட்டினதும் தோல்வியாகும். இது நாளடைவில் அரிசிக்கான மிகப் பெரும் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
நாட்டின் நிதி நிலைமையில் அரிசியை தொடர்ந்தும் இறக்குமதி செய்ய முடியாது. அத்துடன் ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியாக ரூபா 65/- அறவிடப்படுவதாகவும் செய்திகள் உள்ளன.
இந்த சூழ்நிலையில் நாம் வெள்ள அழிவிலிருந்து தப்பிய நெற் செய்கையை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலபோக நெல் அறுவடை தொடர்பாக தீர்க்கமான தீர்மானங்களை விவசாயிகளும் அதிகாரிகளும் இணைந்து எடுப்பதன் மூலம் அவற்றை ஓரளவுக்கேனும் பாதுகாக்க முடியும்.
****" காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை நாம் அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்" *******
-நாகமுத்து பிரதீபராஜா-