தற்போது உருவாகும் காற்றழுத்த மையம் பெரியகல்லாற்றிலிருந்து 720 Km தொலைவில் மையம் கொண்டுள்ளது


கடந்த வெள்ளிக்கிழமை அந்தமான் கடலில் உருவான காற்றுச்சுழற்சியானது நாளை அதிகாலைக்குப் பின்னர் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இதன் சுழற்சிமையமானது மட்டக்களப்பு பெரியகல்லாற்றில் இருந்து தென்கிழக்காக 720km தொலைவிலுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல குறித்த தாழ்வுமண்டலமானது சென்னைக்கும் தரங்கம்பாடிக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியால் கரையைச் சேரும் என்று தரவுகள் காட்டுகின்றன. (சில மாதிரிகள் ஆந்திரப்பிரதேசத்துக்கு வடக்கை அடையலாம் என்று காட்டுகின்றது)
இன்று மாலையில் இருந்து வடகிழக்கில் மிதமான மழையையும், அதாவது அடுத்து வருகின்ற 72 (16-18) மணித்தியாலங்களுக்குள் வடகிழக்கில் மிகக் கனமான மழை பெய்து ஓயும்.
16/12/2024 அதிகாலை முதல் கிழக்கில் அம்பாறை, களுவாஞ்சிக்குடி தொடக்கம் வாழைச்சேனை, வாகரை வரையான பகுதிகளும், கந்தளாய் தொடக்கம் தோப்பூர், நிலாவெளி, கிண்ணியா முதலான திருமலையின் பகுதிகளும் கடும் மழையை எதிர்கொள்ளும். வடக்கில் 16 முதல் ஐந்து மாவட்டங்களிலும் மிகக் கனமழையை எதிர்பார்க்கலாம்.
வடக்கில் 100km க்கும் குறைவான நீளத்தைக் கொண்டுள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட ஆறுகளுக்கான நீர்வரத்து 16,17 பெய்யும் கனமழையுடன் மேலும் அதிகமாகும். குறித்த நீரேந்துப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருப்பது நல்லது. இந்த பருவமழை தொடங்கியதிலிருந்து மூன்று முறை வான்பாய்ந்த குளங்கள் கூட வடக்கிலுள்ளன. இவை தொடர்பான முன்னெச்செரிக்கைகள் அவசியமானது. வடகிழக்கில் 16,17,18 நாட்களில் 50km/h வேகத்தில் காற்று வீசும். கடல்பயணம், ஆழ்கடல் மீன்பிடி என்பன இக்காலத்தில் தவிர்ப்பது நல்லது.
வடகிழக்கிலுள்ள 08 மாவட்டங்களிலும் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் திரட்டிய மழை வீழ்ச்சியாக 100-350mm ஆகக் கூட அமையும் என்றே தரவுகள் காட்டுகின்றன. இது வடகீழ்ப் பருவமழையின் இரண்டாம் தவணைக்கான கனமழை.
16-18 வரையான காலத்தில் இடிமின்னல் தாக்கமானது பின்வரும் இடங்களில் மிக அதிகமாகக் காணப்படும். மட்டக்களப்பு கரடியனாறு, மாவடியோடை, மண்கேணி, காயாங்கேணி, வாகரை. அம்பாறை, சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது, மருதமுனை கிளிநொச்சி-முல்லைத்தீவு விசுவமடு, தேவிபுரம், வட்டக்கச்சி, புதுக்குடியிருப்பு. வவுனியா எல்லப்பர்மருதங்குளம், ஆசிகுளம்.
தமிழகத்தில் 16/12/2024 நள்ளிரவு முதல் 20/12/2024 வரை கனமழையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், வேலூர், புதுச்சேரி (Red), திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்சமழை பெய்யும். மீண்டும் டெல்டா வலயத்தில் மழை தொடரும். அத்துடன் ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலும் (திருப்பதி, நெல்லூர்) இக்காலத்தில் மிகக் கனமழை பெய்யும்.
மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கான விளக்கப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் இற்றைப்படுத்தப்படும்.
-சுயாந்தன்.