காற்றழுத்த தாழ்வு வலுவடையும் -மழை தொடர்ச்சியாக காணப்படும்


இன்று முதல் சில நாட்களுக்கு மழை பெரும்பாலும் தொடர்ச்சியாக காணப்படும்.வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திலும் அராபிய கடல் பிராந்தியத்திலும் தற்போது காணப்படுகின்ற காற்று சுழற்சி காரணமாகவே இந்த காலநிலை ஏற்படுகின்றது. சுமத்திரா தீவருகே நேற்றைய தினம் வந்தடைந்த காற்று சுழற்சியானது இன்றும் (19.11.2024)  அதே இடத்தில் காணப்படுகின்றது.

இது வரும் நாட்களில் படிப்படியாக வலுவடையும்.

இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 21ஆம் திகதி தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் ஒரு காற்றழுத்தப் நிலையாக வலுவடையும்.

இதன் பின்னர் இது மேற்கு-வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து எதிர்வரும் 23ஆம் திகதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Area) தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர் எதிர்வரும் 25ஆம் திகதியளவில் இது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதே தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Well Marked Low Pressure Area) மேலும் வலுவடையும்.

அதன் பின்னர் இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, ஒரு தாழமுக்கமாக (Depression) தெற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் மேலும் வலுவடையும்.

சில சந்தர்ப்பங்களில் இது ஒரு சூறாவளியாக வலுவடையும் சாத்தியமும் காணப்படுகின்றது.

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Saudi Arabia நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Fengal (Pronounce as Feinjal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

இது சூறாவளியாக வலுவடைந்தாலும் இது சூறாவளியின் ஆரம்ப நிலையிலேயே (Early stage) காணப்படும் என்பதால் ஓரளவு காற்றை கொண்ட, மழையுடனான ஒரு சாதாரண நிகழ்வாகவே இது காணப்படும்.

புயல் அச்சம் தேவையில்லை.

இதன் பின்னர் இது வட இலங்கை, தமிழ் நாடு அருகே வந்து எதிர்வரும் 28 திகதிளவில் தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில சந்தர்ப்பங்களில் இது இலங்கையின் தெற்காக நகரும் சாத்தியமும் காணப்படுகின்றது.

இது தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லும் சந்தர்ப்பத்தில் இதன் வலு சற்று குறைவடைந்து, மேற்கு நோக்கி நகர்ந்து அரபிய கடல் பகுதிக்கு சென்று, மீண்டும் அது அங்கே வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இலங்கையை நெருங்கி வரும் காரணத்தினால் எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

க.சூரியகுமாரன்,
சிரேஷ்ட வானிலை அதிகாரி