மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் மீறல்கள் -மட்டு.தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி முரளிதரன்


பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் நேற்று நள்ளிரவு முதல் நிறைவுபெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 218தேர்தல் விதி முறை மீறல்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் இதுவரையில் எந்தவித தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லையெனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முடிவுறு நிலையில் உள்ளன.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 449686 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தபால் மூல வாக்களிப்பிற்காக 14003 பேர் தகமை பெற்று அந்த நடவடிக்கைகள் யாவும் நடைபெற்று முடிந்துள்ளன. இம்முறை தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் நிலையமாக இம்முறையும் இந்துக் கல்லூரியே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 46 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 09 நிலையங்களும் ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்களும் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கைகள் யாவும் தேர்தல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளன. இதுவரை வாக்களர் அட்டைகள் கிடைக்காதவர்கள். தங்கள் பிரதேச தபால் நிலையங்களுக்குச் சென்று வாக்களர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் விதி மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. தேர்தல் வன் செயல்கள் எதுவும் மாவட்டத்தில் பதிவாகவில்லை. பொலிஸ் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் கூட்டாக இணைந்து பாதுகாப்புக் கடமைகளின் சிறப்பாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று 11 நள்ளிரவுடன் முடிவுறுத்தப்பட்டிருக்கின்றன. இதன் பிற்பாடு அவர்கள் தங்கள் எதுவித பிரச்சார நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது.
பொதுமக்கள் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி காலை 07.00 மணியில் இருந்து பிற்பகல் 04.00 மணிவரையில் வாக்களிக்க முடியும். எனவே நேரகாலத்துக்குச் சென்று தங்கள் வாக்களிப்பினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.