மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டார கிளை தலைவர் செயலாளர், பொருளாளர், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வின் போது அஞ்சலி செலுத்தும் முகமாக தீபச்சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,
சம்பந்தன் ஐயா ஞாபசக்தி அதிகம்கொண்ட மனிதராகவும் அனைத்து விடயங்களிலும் தேர்ச்சிபெற்ற ஒரு தலைவராகயிருந்தார்.
தந்தை செல்வாவுடனும் அரசியல் செய்து தலைவர் பிரபாகரனுடனும் அரசியல் செய்த ஒரு அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயாதான்.
தந்தை செல்வாவின் அகிம்சை ரீதியான அரசியல் பணியில் இணைந்து முன்னெடுத்ததுடன் ஆயுதப்போராட்டத்தில் பங்குபற்றாவிட்டாலும் தேசிய தலைவரின் வழிகாட்டலை பின்பற்றி அவருடன் பேசிக்கொண்டு 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கும் வரையில் அரசியல் செய்த பணியும் அவருக்கு இருக்கின்றது.அகிம்சை ரீதியான போராட்டத்திலும் ஆயுத ரீதியான போராட்டத்திலும் இருந்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிய தலைவரை இன்று நாங்கள் இழந்துநிற்கின்றோம்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 1978ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 1982ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜே ஆர் ஜயவர்த்தன ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் 1987ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அதில் பேச்சாளராகயிருந்து ராஜிவ்காந்தியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வடகிழக்கு இணைந்த தீர்வினைப்பெறவேண்டும் என்பதற்காக கூடிய பங்காற்றினார்.
சம்பந்தர் ஐயா தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பில் இந்த நாட்டில எட்டு ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் ஐந்து ஜனாதிபதிகளுடனமும் முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் மூன்று ஜனாதிபதிகளுடனும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண பேசியிருக்கின்றார்.தமிழர்களின் பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கவேண்டும் என்ற பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அதில் அவர்களை நம்பி ஏமாந்தவராக நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்கின்றோம்.
தற்போது ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெறப்போகின்றது.அந்த தேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதியுடன் பேசி ஏமாறுவதற்கு முன்பாகவே அவர் மரணித்துவிட்டார்.அவர் இருந்திருந்தால் ஒன்பதாதுவ ஜனாதிபதியும் அவரை ஏமாற்றியிருப்பார்.
சம்பந்தர் ஐயா முன்னெடுத்த விடயங்களை நாங்கள் தொட்டுச்செல்வதாகயிருந்தால் இணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றைப்பெறவேண்டும் என்பதில் அவர் முழுமூச்சாகயிருந்தார்.இந்த ஆண்டு தமிழரசுக்கட்சியின் 75வது ஆண்டு நிறைவு விழா நடைபெறயிருக்கின்றது.அவர் அந்த விழா நடைபெறும்போது உயிருடனாவது இருப்பார் என்று எண்ணியிருந்தோம்.
அவர் நடக்கமுடியாத சூழ்நிலையில் தள்ளுவண்டியில் செல்லும்போதும் வடகிழக்கில் ஒரு நிரந்த அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதில் உறுதியாக பயணித்தார்.
இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக,எதிர்க்கட்சி தலைவராகயிருந்து இறக்கும் வரையில் பாராளுமன்ற உறுப்பினராகயிருந்தவர் என்ற வரலாறு சம்பந்தர் ஐயாவுக்கு மட்டும்தான் இருக்கின்றது.
அவர் ஒரு வரலாறு படைத்த தலைவராகயிருக்கின்றதன் காரணத்தினால்தான் இன்று சர்வதேச தலைவர்கள் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள்.தமிழ்நாட்டின் முதல்வர் கூட அவரது அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக செய்திவந்துள்ளது.சர்வதேசத்தினால் மதிக்கப்பட்ட தலைவராகயிருந்திருக்கின்றார்.அவருக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியென்றால் தமிழ் தேசியத்தில் உறுதியாகயிருந்து எதிர்வரும் காலங்களில் தமிழ் தேசியத்தினை முன்னோக்கிகொண்டுசெல்பவர்களாக நாங்கள் மாறவேண்டும்.அதுவே அவருக்கு நாங்கள் செய்யும் அஞ்சலியாகும்.என்றார்.