தமிழ் பொதுவேட்பாளரை நிராகரிப்பவர்கள்,எந்த வேட்பாளரை ஆதரிக்கவேண்டும் என்பதை கூறவேண்டும் -அரியநேத்திரன்


இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக ஒரு தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தி வடகிழக்கு தமிழினத்தின் தமிழ்தேசிய கொள்கையில் தமிழர்கள் உள்ளனர் என்பதை சர்வதேசத்திற்கு காட்டமுடியும். தமிழர்கள் பல துன்ப துயரங்களை கண்டாலும் அவர்கள் தமக்கான தனித்துவத்தில் உறுதியாக உள்ளனர் என்பதை காட்ட இந்த தேர்தலை பயன்படுத்தாலாம். ஆனால் தமிழ் பொது வேட்பாளர் வேண்டாம் என கூறும் தமிழர்கள் எந்த பெரும்பான்மை இன வேட்பாளரை என்ன கொள்கையில் தமிழ்மக்கள் ஆததரிக்கமுடியும், வாக்களிக்கமுடியும் என்பதை கூறமுடியுமா ? என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக மேலும் கருத்துக்கூறுகையில் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை 1978, ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியல் யாப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அதற்கான முதலாவது தேர்தல் 1982,அக்டோபர்,20, ல் இடம்பெற்றது அதில் அன்று தொடக்கம் ஜேஆர் ஜெயவர்தன ஜனாதிபதியாக 1988,டிசம்பர்,17, வரை செயல்பட்டார்.
இவரின் காலத்தில்தான் 1987,யூலை,29, ல், இலங்கை இந்திய ஒப்பந்தம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜேஆர் ஜெயவர்தனவுக்கும் ஏற்படுத்தப்பட்டதும் 13, வது அரசியல் யாப்பு திருத்தம் நிறைவேறி இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றதும் வரலாறு ஆனால் இன்றுவரை அந்த 13, வது அரசியல் திருத்தம் எதுவுமே தமிழர்களுக்கு இல்லை.அதை இதுவரை எந்த ஜனாதிபதிகளும் தரவும் இல்லை.
1988, டிசம்பர்,18, தொடக்கம் 1993, மே,01, வரை ஜனாதிபதியாக இருந்த ஆர் .பிரமதாசா அவர்தான் 1990, ல் தமிழ் முஷ்லிம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் முஷ்லிம் ஊர்காவல் படையை உருவாக்கி வடகிழக்கில் தமிழ் முஷ்லிம் மக்களிடையே மோதலை உண்டாக்கி பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார் அவர் உருவாக்கிய பகைமை இன்றுவரை தொடர்கிறது.
அவர் காலத்தில்தான் 1990,யூன்,29, அம்பாறை வீரமுனை இனப்படுகொலை தொடக்கம் 1993,,டிசம்பர்,03, யாழ் குருநகர் யாக்கூப் ஆலய படுகொலை வரை இடம்பெற்றது.
1993, மே,02, தொடக்கம் 1994,நவம்பர்,08, வரை ஜனாதிபதியாக செயல்பட்ட டீபி. விஜயதுங்கா தமிழர்களை இம்சித்து பல இனவாத கருத்துக்களை கூறினார்.இவர்காலத்தில்தான் 1994,செப்டம்பர்,09, நவாலி தேவாலய இனப்படுகொலை நடந்தது.
1994,நவம்பர்,09, தொடக்கம்2005, நவம்பர் 16, வரை சமாதானப்புறாவாக தன்னை வெளிக்காட்டி ஜனாதிபதியாக இரண்டுதடவை பதவி ஏற்பதற்கு தமிழ்மக்கள் முழு ஆதரவை வழங்கியும் அவர் காலத்தில் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வும் வரவில்லை, 1996,பெப்ரவரி,02 கிளிவெட்டி குமரபுரம் படுகொலை தொடக்கம் 1999,அக்டோபர்,07, செம்மணி படுகொலை வரை இவரின் காலத்தில்தான் இடம்பெற்றது.
2005,நவம்பர்,17, தொடக்கம்2015, ஜனவரி,07, வரை இரண்டுதடவை ஜனாதிபதியாக செயல்பட்ட மகிந்தராஷபக்கசவின் ஆட்சிக்காலத்தில் 2006,மார்ச்,12, அல்லப்பிட்டி தேவாலயம் தொடக்கம் 2009, மே,18,வரை இடம்பெற்ற இன்ப்படுகொலையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட வரலாறுகளை மறக்க முடியாது.
மகிந்தராஷபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன் ஐயா தலைமையில் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தி ஏமாற்றப்பட்ட வரலாறுகள் பல உண்டு.
2015, ஐனவரி,08, தொடக்கம் 2019,நவம்பர்,17, வரை ஜனாதிபதியாக மைத்திரி செயல்பட்ட காலத்தில் நல்லாட்சி எனும் பெயரில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சிதலைவர் பதவி சம்பந்தன் ஐயாவுக்கு வழங்கி புதிய அரசியல் யாப்பு திருத்தம், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு கிடைக்கும் என மைத்திரியும், பிரதமர் ரணிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பை நம்மி ஏமார்ந்தும் எதுவுமே கிடைக்கவில்லை.
2019,நவம்பர்,18, தொடக்கம் 2022, யூலை,20, வரை ஜனாதிபதியாக இருந்து சிங்கள பெரும்பான்மை மக்களால் துரத்தப்பட்ட கோட்டபாய ராஷபக்கவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு 10, பாராளுமன்ன உறுப்பினர்களை அழைத்து பேசியும் எந்த தீர்வும் இல்லை.
2022, யூலை,21 தொடக்கம் இன்று வரை (2024, ஏப்ரல்) வரை ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்காவும் தமிழ் இனப்பிரச்சனைக்கான எந்த தீர்வும் வழங்கமுடியாத நரியாகவே உள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக்கூடியவர்கள் என கூறப்படும் தற்பொதய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இன்றுவரை இனப்பிரச்சனைக்கான தீர்வு எதையும் முன்வைக்க வில்லை.
இனப்பிரச்சனை தீர்வை முன்வைக்காவிட்டாலும் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல்தரை பெரும்பான்மை மக்கள் அபகரிப்பை எதிர்த்து 230, நாட்களை எட்டும் சித்தாண்டி பண்ணையாளர்கள் போராட்டம், கல்முனை வடக்கு பிரதேச்செயலக நிர்வாக அடக்குமுறைக்கு எதிராக 25, நாட்களை எட்டும் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்ட வடகிழக்கு உறவுகளின் ஏறக்குறைய 3000, நாட்களை எட்டும் போராட்டம், வெடுக்கு நாறிமலை அபகரிப்பு, திட்டமிட்ட தொல்பொருள் திணைக்கள ஆக்கிரமிப்பு என பல தரப்பட்ட விடயங்களுக்கு தீர்வு வழங்க முடியாத இவருக்கா தமிழ் மக்கள் வாக்களிப்பது?
எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரமதாசாவுக்கு கடந்த 2019, ல் தமிழ் மக்கள் வாக்களித்தோம் அவர் வெற்றிபெறவில்லை உண்மை ஆனால் எதிர்கட்சி தலைவராக 2022, தொடக்கம் இன்றுவரையும் செயல்படும் இவரால் இதுவரை  வடகிழக்கு நில ஆக்கிரமிப்பை தடுக்க முடுந்ததா ? அல்லது அதற்கு எதிராக குரல் கொடுக்க முடிந்ததா? இதுவரை தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு அவர் என்ன தீர்வை முன்வைத்தார்? இப்படியான முதுகெலும்பு இல்லாதவருக்கா தமிழர்கள் வாக்களிப்பது?
சிங்கள மக்களுடைய பேராதரவு தமக்கு உண்டு என கூறும் ஜே வி பி அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவானால் அவரிடம் தமிழ் இனப்பிரச்சனை தீர்வுக்கான பொறிமுறை என்ன? கடந்த 2006, ல் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் ஆலோசனையை ஏற்று இணைந்த வடகிழக்கை நீதிமன்றுக்கு சென்று சட்ட ரீதீயாக பிரித்தவர்கள் இந்த அனுரகுமாரதிசநாயக்கவின் கட்சிதான் இவரிடம் தமிழ் இனப்பிரச்சனைக்கான எந்த திட்ட வரைவும் இல்லை, இப்படியானவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியுமா?அவருடன் பேசி எதை எதிர்பார்பது?
அடுத்து மொட்டுக்கட்சிக்கு இதுவரை வேட்பாளர்கள் தட்டுப்பாடு பசீலா நாமலா என ராஷபக்ச குடும்பம் திட்டாடுகிறது ஈற்றில் ரணிலை ஆதரிப்பார்கள் இந்த இனப்படுகொலையாளர்களுக்கு தமிழர்கள் வாக்களிக்க முடியுமா?
1982, தொடக்கம் கடந்த 2024,வரையும் 42, வருடங்களாக பெரும்பான்மை ஜனாதிபதிகளால் தமிழ் இனப்பிரச்சனைக்கான எந்த ஒரு நிரந்தர தீர்வும் வழங்க முடியாத வக்கற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டு ஜனாதிபதிகளால் தமிழரும் தமிழ் தலைவர்களும் ஏமாற்றப்பட்டதே வரலாறு.
இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை ஒற்றுமையாக நிறுத்தி வடகிழக்கு மக்களின் தனித்துவ அபிலாசைகளில் தமிழர்கள் ஒற்றைமையாகவும் உறுதியாகவும் உள்ளனர் என்பதை ஒரே ஒரு தடவை நிருபிப்பதற்காக இந்த பொதுவேட்பாளர் விடயத்தை சாதகமாக பரிசீலிப்பதே நல்லது.
சிலவேளை எதிர்மறையான கருத்துக்கள் தமிழ்மக்கள் வாக்கெடுப்பு மூலம் காட்டினால் அதையும் ஏற்று அடுத்த கட்ட தமிழ்த்தேசிய அரசியலை எவ்வாறு நகர்த்தலாம் என்பதை சிந்திக்கலாம் எனவும் அதற்காக பொது தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை அனைவரும் ஏற்பதே காலத்தின் தேவை எனவும் மேலும் கூறினார்.