கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சுமார் 800வருடங்களுக்கு முற்பட்ட ஆலய வரலாற்றினையும் பழமையினையும் கொண்ட இந்த ஆலயமானது சிறப்புமிக்க ஆலயமாக இருந்துவருகின்றது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு பெரியகல்லாறு கடல்hநச்சியம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மஹோற்சவகால குரு சிவஸ்ரீ நித்திய சிவானந்த குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் கொடியேற்ற வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
ஆலயத்தில் மூலவருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் விசேட யாகம் மற்றும் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு விசேட அலங்கார பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலையும் விநாயகப்பெருமானும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது ஆலயத்தின் பண்டைய முறையின் கீழ் நிகழ்வுகள் நடைபெற்று பக்தர்களின் ஆரோகரா கோசத்திற்கு மத்தியிலும் வேதநாத பாராயணம் முழங்க நாதஸ்வர மேளவாத்திய இசை முழங்கள் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து பெரியகல்லாறு கணேசா நாட்டியாலய மாணவர்களினால் கொடியேற்றத்தினை சிறப்பிக்கும் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.
15தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் கொடித்தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை,சுவாமி உள்வீதி,வெளிவீதியுலா நடைபெறும்.
எதிர்வரும் 23 திகதி சனிக்கிழமை மாலை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் மறுதினம் தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.