மட்டக்களப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட போராட்டம் -நகரில் ஏற்பட்ட நிலை(VIDEOS)

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பனவற்றை மீளப்பெறுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டமும் அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் இணைந்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சட்ட வரைபுகளை மீளப்பெறவேண்டும் என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமானது.

பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரையில் வருகைதந்ததுடன் அங்கு ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுதந்திரமான வெளிப்படுத்துவதற்கும் ஒன்றுசேருவதற்குமான உரிமையினை உறுதிசெய்,அரசே இலங்கை அரசியல் யாப்பிலுள்ள மனித உரிமையை மீறி செயற்படாதே,மக்களுடைய அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அரசுடைய கடமையாகும்,பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவை மீளப்பெறு உட்பட பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள்,மகளிர் அமைப்புகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கியதுடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகீர் மௌலானாவும் ஆதரவு வழங்கினார்.

கவன ஈர்ப்பு போராட்டத்தினை தொடர்ந்து அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சிவில் சமூகத்தின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டு அவை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை இன்றைய தினம் காந்திபூங்காவில் ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகே உண்ணாவிரத போராட்டம் நடாத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை பொலிஸாரின் உத்தரவுக்கு அமைவாக அகற்றப்பட்டதுடன் பொலிஸார் தமது ஜனநாயக ரீதியான போராட்டத்தினை அடக்கமுனைவதாக கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் அனுமதிபெற்றே குறித்த மேடை அமைக்கப்பட்டதாகவும் ஆனால் இன்று காலை கொழும்பிலிருந்து வந்த உத்தரவுக்கு அமைவாக மேடையை அகற்றுமாறும் போராட்டத்தை நிறுத்துமாறும் கூறப்பட்டதாகவும் ஆனால் மேடை அகற்றப்பட்டாலும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்தாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் கொண்டுவரப்படும் புதிய சட்ட வரைவுகள் மூலம் ஒரு மனிதனின் ஜனநாயக உரிமைகள் முடக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.