மிக்ஜாம் சூறாவளி தொடர்பான புதிய அறிவிப்பு


தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, நேற்றைய தினம் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில்  365  கிலோ மீற்றர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு தொடர்ந்து வலுவடைந்து நாட்டை விட்டு வடமேற்கு நோக்கி நகரும் என திணைக்களம் குறிப்பிடுகிறது.

இது நாளை (05) வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு நோக்கி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் சூறாவளி சென்னை அருகே நிலை கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. 

அதிகாலையில் சூறாவளி காற்றோடு மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சரிந்து  விழுந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பருவ மழை காலத்தில் முதல் சூறாவளியானது தற்போது உருவாகியுள்ளது.

இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சார்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய ரயில்கள் மற்றும் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த சூறாவளியின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழையானது விடாமல் கொட்டி வருகிறது. 

பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். 

பல இடங்களில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நள்ளிரவில் இருந்து சூறாவளி காற்றோடு மழையானது பெய்து வருகிறது. 

சென்னையில் அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழையோடு சேர்ந்து காற்றும் வீசிவருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் சரிந்து கீழே விழுந்துள்ளன.

மேலும் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.