எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


அடுத்த 36 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான  கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50  கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (02) பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 10.5° வட அகலாங்கு மற்றும் 84.1° கிழக்கு நெடுங்கோடுக்கு அருகாமையில் திருகோணமலையிலுருந்து சுமார் 380 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்காக நிலைகொண்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. .

மேலும் இது நாளை (03) சூறாவளியாக உருவாகும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 04, 2023 க்குள் இந்தியாவின் வடக்கு தமிழ்நாடு கடற்கரையை அடைந்து பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 05, 2023 க்குள் தெற்கு ஆந்திரா கடற்கரையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.