2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன.
2,298 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம் இந்த பரீட்சைகளுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாத்தாள் குறித்த கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்கு இம்மாதம் 29ம் திகதி முதல் தடைவிதிக்கப்படும்.
29ம் திகதி நள்ளிரவின் பின்னர் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்சரித்துள்ளார்.
இதேவேளை இம்முறை பரீட்சை முறைக்கேடுகள் தொடர்பாக விசாரணை செய்வது குறித்து மிகுந்த அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இம்முறை சுமார் 2,458 விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 2,300 பொலிஸ் அதிகாரிகள் பரீட்சை நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலதிமாக 12,000 பாடசாலை ஆசிரியர்களும் பாடசாலை அதிபர்களும் பரீட்சை கடமைகளுக்காக நியமிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முறைக்கேடுகளில ஈடுபடுகின்ற பரீட்சார்த்திகள் யாரேனும் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, அவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சை வினாத்தாளுக்கான விடை எழுதும் போது முறைக்கேடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த இரண்டு வருடங்களில் உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 345 மாணவர்களுக்கான பெறுபேறு இன்னும் வெளியிடப்படவில்லை என்றும், அவர்கள் முறைக்கேடுகளில் ஈடுபட்டமையே இதற்கான காரணம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.