ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர் உற்சவம் -தங்கமாக ஜொலித்த தேர்


இலங்கையின் ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேரோட்டம் நேற்று மாலை ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இலங்கைத் திருநாட்டில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழ் மொழியில் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக இருந்துவருகின்றது.

மிகவும் பழமையான இந்த ஆலயமானது மகாதுறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமிகளினால் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக அருள்பாலித்துவருகின்றது.

நேற்று மாலை விசேட யாகம் நடைபெற்று முருகப்பெருமானுக்கு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து முருகப்பெருமான் தேரடிக்கு பக்தர்கள் புடைசூழ கொண்டுரவப்பட்டார்..

தேரடியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சித்திர சிறப்பதேரில் முருகப்பெருமான் ஆரோகனிக்க ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிபிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேரோட்டத்தின்போது இலங்கையின் ஆலய திருவிழாவின் வரலாற்றில் இந்துக்களிடமிருந்து மருவிச்சென்றுள்ள நவசந்திகௌத்வம் இங்கு ஆடப்பட்டது.தேர்வரும் ஒன்பது சந்திகளில் ஒன்பது நடனங்கள் இதன்போது ஆடப்பட்டன.

கடந்த 04ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தில் இன்றைய தினம் காலை தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவுபெற்றது.