(பொன்.நவநீதன்)
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் போட்சிற்றி என்பனவற்றினை சீனாவுக்கு வழங்கியபோது வாய்திறக்காத பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்தியாவுக்கும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைக்க நடவடிக்கையெடுக்கும்போது மட்டும் மக்கள் கருத்துப்பெறவேண்டும் என்பது அவரின் ஒரு பக்க செயற்பாட்டினை காட்டுவதாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் வடக்கில் மன்னாரிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கு நாங்கள் எமது முழுமையான ஆதரவினை வழங்குகின்றோம்.அத்துடன் அனைவரும் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
இந்த நாட்டில் மீண்டும் ஒரு இனக்கலவரம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சநிலை தமிழ் மக்கள் மத்தியில் உருவெடுத்திருந்தாலும் ஒவ்வொரு தேர்தல்கள் வரும்காலத்திலும் இனவாதத்தினை தூண்டிவிட்டு அரசியல்செய்வது இந்த நாட்டில் வழமையாகிவிட்டது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை தமக்கு சாதமாக பயன்படுத்தி தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதை பூதாகரமாக்கி ஜனாதிபதி தேர்தலில்வெற்றிபெற்றார்கள்.
எதிர்வரும் ஆண்டும் ஓரு தேர்தல் ஆண்டாகயிருக்கப்போகின்றது.இதனை மையமாகக்கொண்டு ஒரு சில இனவாதிகள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களை சுற்றிவளைக்கவேண்டும் என்றும்,வடகிழக்கில் பௌத்தமதத்திற்கு எதிராக தமிழர்கள் செயற்படுகின்றார்கள் என்று இனவாதத்தினை வெளிக்கிளப்பி கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்பாகவும் இரண்டு தினங்களாக ஆர்ப்பாட்டங்களை செய்திருந்தார்கள்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிகின்றோம்.
பாராளுமன்ற உதயகம்பன்வெல கூறுகின்றார் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பில் சிங்களவர்களின் தலைநகரத்தில் தமிழர்களுக்கு என்னவேலையென்று.வடகிழக்கில் நீங்கள் வந்து அடாத்தாக கூடியேறுகின்றீர்கள்,ஆனால் கொழும்பிலும் தெற்கிலும் தமிழர்கள் அடாத்தாக குடியேறவில்லை என்பதை கம்பன்வெல போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்களே கொழும்பு சிங்கள தலை நகரம் வடக்கு கிழக்கு தமிழர்கள் தாயகம் என்றால் பாராளுமன்றத்தில் நீங்களே வடக்கு கிழக்கினை பிரித்து எங்களை தனிநாடாக பிரகடனப்படுத்திவிட்டால் எல்லோருக்கும் அதுவசதியாக இருக்கும்.
எதிர்வரும் நாட்களில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வரவிருக்கின்றார். கடலை ஆய்வு செய்யும் சீனாவின் ஒரு ஆய்வுக் கப்பல் வரும் ஒக்டோபரில் இலங்கைக்கு வரவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மாறி மாறி பூகோள ரீதியாகவும் இலங்கை சிக்கித் தவிக்கின்றது. உள்ளுர் அரசியல் ரீதியாகவும் இலங்கை சிக்கித் தவிக்கின்றது. இதனைப் பார்க்கும்போது இலங்கைக்கென்று ஒரு நிரந்தரமான உள்நாட்டுக் கொள்கையுமல்ல வெளிநாட்டுக் கொள்கையுமல்லாத கொள்கையற்ற ஒரு அரசாங்கமாக இந்த அரசாங்கமும் ஜனாதிபதி அவர்களும் செயற்படுகின்றனரோ என எண்ணத் தோன்றுகின்றது.
ஏனென்றால் உள்ளுரில் நடைபெறும் இனரீதியான பாகுபாட்டை, முறுகலை ஜனாதிபதி மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பதுடன் பூகோள ரீதியிலே இந்தியாவும் சீனாவும் இலங்கையை கையாள்வதைக்கூட பார்த்துக்கொண்டிருக்கின்றார். இது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு சுபீட்சமாக இருக்காது.
இலங்கையில் பேராயர் ரஞ்சித் மல்கம் அவர்கள் நேற்றைய தினம் காட்டமாக ஒருசில வார்த்தைகள் கூறியிருந்தார். இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே பாலம் அமைக்கப்படவிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் அவர்கள் இந்தியா சென்று மோடி அவர்களை சந்தித்து சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார்.
நாங்கள் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் சந்தேக கண்கொண்டு பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இவர் மத ரீதியாக மக்களுக்கு சேவைசெய்கின்றாரா அல்லது அரசியல் ரீதியாக இனவாதிகளைப்போன்று செயற்படுகின்றரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் கட்டுவதற்கு மக்களது கருத்துகளை கேட்கவேண்டும்,சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தவேண்டும் என்ற ரீதியில் பேசும் இந்த ஆண்டகை அவர்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவுக்கு 99ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கும்போதும் வாய்திறக்கவில்லை இலங்கை வரைபடத்தையே மாற்றும் வகையில் கடலை நிரப்பி போட்சிற்றி அமைக்கப்பதற்கு சீனாவுக்கு தாரைவார்க்கும்போது வாய்திறக்கவில்லை.கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட படுகொலைகள் தொடர்பாகவும் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் நவாலி தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தி மக்களை கொலைசெய்தபோது கூட வாய்திறக்காதவர்தான் இந்த ஆண்டகை.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு இன்று வரை நீதிகோரிவருகின்றார்.நாங்களும் கூறுகின்றோம் அந்த குண்டுத்தாக்குதலுக்கு நீதிவழங்கப்படவேண்டும்.அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிவேண்டும்.அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
வடகிழக்கிலே இருந்த இருக்கின்ற ஆயர்கள் குறிப்பாக மன்னார் ஆயராகயிருந்த இராஜயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் இறுதி யுதத்தின்போது முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சாட்சியமளித்திருந்தார்.அதேபோன்று திருகோணமலை,மட்டக்களப்பு பிராந்திய ஆயராக 1990 காலப்பகுதியில் செயற்பட்ட கிங்கஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் அக்காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அத்தனை சம்பங்களுக்காகவும் குரல்கொடுத்திருந்தார்.ஆனால் இவர்களுக்கு மேலாக இருக்கின்ற பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் சரத் வீரசேகர, உதயகம்பன்வெல, விமல்வீரவன்ச ஆகியோரைப் போன்று குறுகிய சாரர்களுக்காக பேசிவருகின்றார்.
இந்தியாவுக்கு பாலம் அமைக்க மக்கள் கருத்து தேவைவையென்றால் சீனாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் கருத்து வெளிப்படுத்தாமல் இருப்பது பேராயர் எந்த நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றார் என்பது வடகிழக்கு தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா என்ற சந்தேகம் எங்களுக்கு வருகின்றது.
பேராயர் அவர்களை நாங்கள் மதிக்கின்றோம்.மதரீதியாக மக்களுக்கு சேவைசெய்யக்கூடியவர் ஒரு சாராருக்காக பேசும் செயற்பாட்டினை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.