நாட்டில் மேலும் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், மொழிகள், புவியியல் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களில் விசேட கவனம் செலுத்தி மூன்று மொழிகளுக்குமான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்படுமெனவும் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, 7,500 பேர் புதிய ஆசிரியர் நியமனங்களைப் பெறவுள்ளனர்.
அரசாங்கம் பௌதீக மற்றும் மனித வளங்களை வழங்கி வருவதாகவும், நாட்டுக்கு சேவை செய்யும் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவது பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை சீருடைகள், பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை உணவுத் திட்டம் மற்றும் தேசிய தேர்வு அட்டவணை தொடர்பான பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை கடினமான காலகட்டத்தை கடந்துள்ளதாகவும், தற்போது ஒரு தேசமாக முன்னோக்கிச் செல்வதற்கு கூட்டு முயற்சி தேவை எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
