யாழ்ப்பாணம் மண்டைதீவு தெற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 85 கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இன்று காலை வடக்கு கடற்படை கட்டளையில் SLNS வெலுசுமன மூலம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 85 கிலோ 450 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா அடைக்கப்பட்ட 22 பொதிகளை அதிகாரிகள் மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 28 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை போதைப் பொருள் சரக்கு கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.
கடல் வழிகளில் முன்னெடுக்கப்படும் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், நாட்டின் கரையோர மற்றும் கடல் பகுதிகளில் ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
