மலசல கூட குழியில் வீழ்ந்த இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று பரிதாபகரமாக உயிரிழந்தது


வி.சுகிர்தகுமார்
 

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை (01) பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் சசிகுமார் சஸ்வந்த் எனும் ஆண் குழந்தேயே பலியானது.
உயிரிழந்த பிள்ளையின் தந்தை வெளிநாடொன்றில் தொழில் புரிந்துவரும் நிலையில் இருபிள்ளைகளின் தாயும் உயிரிழந்த பிள்ளையும் அயலில் உள்ள உறவினர் வீடொன்று வழமைபோன்று சென்றுள்ளனர்.
அங்கு அப்பிள்ளையின் தாயார் உறவினர்களுடன் இணைந்து சிறு வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு போதும் பாதணி இல்லாமல் வெளியிலே செல்லாமல் பழக்கப்படுத்தப்பட்ட சுட்டித்தனமிக்க அப்பிள்ளை யாரும் அவதானிக்காத சந்தர்ப்பத்தில் வெளியேறியுள்ளது.
வெளியேறிய பிள்ளை அருகில் இருந்த வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்ட மலசல கூட குழியில் வீழ்ந்துள்ளது.
சில நிமிடங்களில் பிள்ளையினை காணாத தாயும் உறவினர்களும் தேடியபோதும் பிள்ளை கிடைக்கவில்லை. ஆயினும் சந்தேகமடைந்த ஒருவர் அருகில் இருந்த மலசல கூட குழியில் இறங்கி தேடியபோது அக்குழியின் கீழே பிள்ளை கிடப்பதை அறிந்து வெளியே எடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் பிள்ளை உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் இதுபோன்ற இன்னுமொரு சம்பவம் கண்ணகிகிராமத்திலும் அன்மையில் நடைபெற்றதை நினைவூட்டுகின்றது.
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்படும் இதுபோன்ற குழிகள் மூடப்படுவது மிக முக்கியம் என்பதை இச்சம்பவங்கள் உணர்த்தியுள்ளதுடன் இது தொடர்பில் மக்களுக்கு அறிவூட்ட வேண்டியது சம்மந்தப்பட்டவர்களின் கடமை என்பதும் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றது.
வெளிநாட்டில் இருந்து உயிரிழந்த பிள்ளையின் தந்தை இன்று வருகை தரும் நிலையில் இறுதிச்சடங்குகள் இன்று மாலை இடம்பெறுகின்றன.