உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டது!!


அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் வைப்பு செய்யும் கட்டுப்பணத்தை ஏற்க வேண்டாமென பொதுநிர்வாக அமைச்சினால் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல் வரை தேர்தல் கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்வதை இடைநிறுத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புஹின்னவினால் நேற்று (10) பிற்பகல் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

கடந்த அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த பணிப்புரை விடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் வைப்பு செய்யும் கட்டுப்பணத்தை ஏற்க தேவையான நடவடிக்கை எடுப்பது மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் பொறுப்பாகும் என தேர்தல் ஆணைக்குழு அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 21 ஆம் திகதி மதியம் 12 மணிவரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்திருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தேர்தல் ஆணைக்குழுவை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கும் அதிகாரம் இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் நேற்று விடுக்கப்பட்ட உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மேலதிக விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.