ஒகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், மின்சார சபையின் நஷ்டத்தை ஈடுகட்ட இது போதாது எனவும், எனவே கட்டணத்தை மேலும் அதிகரிப்பதற்கான கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உப குழுவில் இந்த விடயம் வெளியிடப்பட்டது.
அதன்படி, 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
மின்சாரத் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்காக மின் துறையுடன் தொடர்புடைய அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குழுவின் முன் அழைக்கப்பட்டன.
இழப்பை ஈடுகட்ட, மின் கட்டணத்தை 70% உயர்த்த வேண்டும் என CEB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார சபையின் நஷ்டத்தை ஈடு செய்யும் நோக்கில் மின்சாரக் கட்டணங்கள்அதிகரிக்கப்பட்டால் வர்த்தக நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்படும் என குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
CEB தற்போது வங்கிகள் மற்றும் மின்சார விநியோகஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு கிட்டத்தட்ட ரூ.650 பில்லியன் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கும் நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.35 பில்லியனும், அனல் மின்சாரம் வழங்குபவர்களுக்கு ரூ.75 பில்லியனும் செலுத்தப்பட உள்ளதாக CEB பிரதிநிதி தெரிவித்தார்.
இதன்படி, பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் ரூ.50 பில்லியன் கடனில் இருந்து விநியோகஸ்த்தர்களுக்கு ஒரு பகுதி செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் பிரதிநிதிகள் மற்றும் மின் துறையுடன் தொடர்புடைய பிற தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவிடம் தங்கள் பிரச்சினைகள் மற்றும் மின் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து விளக்கினர்.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
