மட்டக்களப்பு- புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலய 222 வது வருடாந்த பெருவிழா!!


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 222 வது வருடாந்த திருவிழா கடந்த (04) திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு திருத்தல நிருவாகக் குரு அருட்பணி ஜே.எஸ்.மொறாயஸ் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும் 4.30 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து புனித அந்தோனியார் நவநாட் செபத்தின் பின் திருப்பலியும் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 12.06.2022 திகதி ஞாயிற்றுக்கிழமை தூய ஆவியார் பெருவிழா காலை 11.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பி.ப 4.30 மணிக்கு மாலை ஆராதனை இடம்பெற்று, நற்கருணை ஆசீருடன் நிறைவடையும். அதன் பின்னர் புனிதரின் திருச்சுரூப பவனி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி வழமையான வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடையவுள்ளது.

நவநாட் காலங்களில் அருட்தந்தையர்களான அருட்பணி சீ.வீ.அன்னதாஸ், ஜே.ஜீ.ஜீவராஜ், பிறைனர் செலர், ஆர்.திருச்செல்வம், ஜே.அனிஸ்ரன் மொறாயஸ், ஜீ.அலெக்ஸ் றோபட், எல்.லோறன்ஸ், எம்.ஸ்ரனிஸ்லாஸ் மற்றும் ஏ.தேவதாசன் உள்ளிட்ட அடிகளார்களினால் சிறப்பு அருளுரைகளுடன் கூடிய திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளன.

பெருவிழா தினத்தன்று 13.06.2022 திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு பெருவிழா கூட்டுத்திருப்பலியாது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி யோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

பெருவிழா கூட்டுத் திருப்பலியினைத் தொடர்ந்து புனிதரின் இறுதி ஆசீருடன் கொடியிறக்கப்பட்டு பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

பெருவிழா சிறப்பு நிகழ்வாக அன்னதான குழுவினால் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதுடன், நவநாட் காலங்களில் புனிதரின் பரிந்துரையால் இறையருள் பெற்றிட பக்தர்களை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் திருத்தல நிருவாக குருவுடன் இணைந்து திருத்தல நிருவாக குழுவினர்.