நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்வதற்கு ஒருபோதும் இடமளியோம் எனவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு மேற்கொள்ளும் தீர்மானங்களுடன் இணங்கி செயற்படுவதற்கு தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மஹாசங்கத்தினரை (26) பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹாநாயக்கர்களினால் வெளியிடப்பட்ட கடிதம் தொடர்பில் வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரினால் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் இதன்போது மஹாசங்கத்தினர் தங்களது கருத்துக்களை தொவித்தனர்.
இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் அது தொடர்பில் மஹாநாயக்க தேரர்கள் தலைமையிலான மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்களதும் ஒப்புதலை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன்போது மஹாசங்கத்தினரிடம் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியமானது என்றும், அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச்செல்வதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பின் போது வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர், வணக்கத்திற்குரிய அகலகொட சிறிசுமன தேரர், வணக்கத்திற்குரிய ரஜவத்தே வப்ப தேரர், வணக்கத்திற்குரிய பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் கலந்து கொண்டிருந்தனர்.