நாளை முதல் அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு...!!


கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்காக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் திங்கட்கிழமை (14) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த 6 ஆம் திகதியுடன் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்த நிலையில் 7 ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட்டன.

எனினும் வகுப்பறைகளிலுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய கற்பித்தல் நடவடிக்கைககளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

அதற்கமைய ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை 20 அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அவர்களுக்கான வகுப்புகளையும் தினமும் நடத்தலாம்.

மாணவர்களின் எண்ணிக்கை 21 முதல் 40 வரை இருந்தால், வகுப்பை இரண்டு குழுக்களாகப் பிரித்து ஒரு வாரம் இடைவெளியில் வகுப்புகளை நடத்துமாறு அறிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் ஆசிரியர் சங்கங்களினால் கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் , நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சினால் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இதற்காக மேலதிகமாக ஒருவார காலம் மூடப்பட்டிருந்த பாடசாலைகளும் மீள திறக்கப்படவுள்ளன.

அதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கேகாலை வித்தியாலயம், கண்டி - கிங்ஸ்வூட் வித்தியாலயம், கண்டி - சீதாதேவி பெண்கள் பாடசாலை, காலி - வித்தியாலோக மகா வித்தியாலயம், பதுளை ஊவா மகா வித்தியாலயம், இரத்தினபுரி பெண்கள் கல்லூரி உள்ளிட்டவற்றில் கல்வி நடவடிக்கைகளும் நாளை முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

எவ்வாறிருப்பினும் கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் பாடசாலைகளை நடத்த முடியாத சூழல் ஏற்படுமாயின் வலய கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்கமைய அதிபர்களால் தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.