பயங்கரவாத தடை சட்டத்தில் தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்கள் போதுமானவையல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு, இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக இல்லதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அமைச்சரவையினால் கடந்த 24 ஆம் திகதி அங்கீகாரமளிக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்திருத்தங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மறுபுறம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் எமது நாட்டிற்குள்ளும் நாட்டிற்கு வெளியேயும் இருக்கக்கூடிய தனிநபர்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதற்கான வாய்ப்பை இச் சட்டம் வழங்குகின்றது.
இந் நிலையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் 2 ஆவது வாசகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேக நபரொருவரைத் தடுப்புக்காவலின் கீழ் வைப்பதற்கான கூட்டுமொத்த காலப்பகுதியை 18 மாதங்களிலிருந்து 12 மாதங்களாகக் குறைப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 10 ஆவது வாசகம் நபரொருவர் 12 மாதங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பின், அவர் பிணைகோருவதற்குத் தகுதியுடைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே வாசகத்தின் 2 ஆவது உபபிரிவு வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கான உத்தரவை மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரத்தை அதிகாரிகளுக்கு வழங்குகின்றது.
இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக இடம்பெறும் அடிப்படை மீறல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்குத் தவறியிருப்பதுடன் ஒருவருடகாலத்திற்கு நபரொருவரை நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்தாமல் தடுத்துவைத்து, அவரது சுதந்திரத்தை மறுப்பதற்கான வாய்ப்பைத் தற்போதும் வழங்குகின்றது.
மேலும் 4 ஆம், 12 ஆம் மற்றும் 5 ஆம் வாசகங்களின் ஊடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரொருவர் அடிப்படை உரிமைமீறல் மனு அல்லது ரிட் மனுவின் மூலம் அத்தடுத்துவைப்பை சவாலுக்கு உட்படுத்துவதற்கும் சந்தேகநபர் சட்ட உதவியை நாடுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது. ஆனால் அவற்றுக்கான வாய்ப்பு பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஊடாக ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது.
எனவே இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக இல்லதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேவேளை அச்சட்டத்தில் மேற்கொள்வதற்கெனத் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் போதுமானவையாக இல்லை என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.